February 13, 2011

முயற்சி தரும் வெற்றி


தெளிவு, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையிலே ஏற்படும் ஓர் உந்துசக்தியே செயலாகப் பயன்படும். இந்த நிலை ஏற்படுவதற்கு மனதிற்குத் தெளிவைக் கொடுக்க வேண்டும்.அறிவை கூர்மைப்படுத்தி உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும். முயற்சிக்கு இம்மூன்றும் உறுதுணையாக இருக்கும். முயற்சி தான் நம்மை முழுமனிதனாக ஆக்கும்.
வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. அறிவை வளரச் செய்வதிலும் துடிப்புடன் நின்றால்தான் நிமிர்ந்து நின்று வளம் பெற முடியும்.‘கிரேக்க சமுதாயத்தின் ஏற்றம் மிகுந்த இளைஞர்களே, வருங்கால கனவான்களே, நீங்கள் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது; அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவு இப்பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைப் பெறுவதற்குத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறேன்’ இந்தக் குரல் வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.
சிந்தித்துச் சிந்தித்துச் தெளிவடைந்த சீர்திருத்தச் செம்மல், ஏதன்ஸ் நகரமாந்தர் அனைவர் உள்ளங்களிலும் உற்சாகத்தையும், ஏதென்ஸ் நகர வீதிகளில் கலகலப்பையும் உண்டாக்கிய சிம்மக்குரலோன் சாக்ரடிஸிடமிருந்துதான் வெளிவந்தது.
அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அடி வானத்திற்கு அப்பாலிருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்ற வினா எழுவது இயல்பு. இதற்கு விடை காண்பது முக்கியம்.
முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே, முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது, வாழ்க்கையிலும் எதுவும் இல்லாமல் போய் விடுகிறது. அப்பொழுது முயற்சிக்கே இடமில்லை.முயற்சி சமுதாய மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. சமுதாயத்தைச் சீர்படுத்துவதே முயற்சிதான். முயற்சி முதலில் அறியாமையை விரட்டுகிறது.
அறியாமை விரட்டப்பட்டால் புது எழுச்சி தோன்றுகிறது. முயற்சி நம்முடைய கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும் கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
விரிவாகப் பார்க்கும்போது முயற்சி நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு மாபெரும் கருவியாக இருந்துவருகிறது.
வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
வாழ்வின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும், உணர்வதற்கும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பது முயற்சிதான்.
முயற்சி செய்தால்தான் வாழ்வதன் மகத்துவம் தெரியும். வாழ்க்கையில் எப்போது நாம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோமோ -
எப்பொழுது உலகில் நாம் முயன்று சாதிப்பதற்கு ஒன்றுமில்லை எண்ணுகிறோமோ அப்பொழுதுதே நம்முடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும்.
எந்த நாடு முன்னேற்றத்தின் விளிம்பை தொட்டுவிட்டோம் என்று இறுமாந்தி நிற்கிறதோ, அதனுடைய அர்த்தம் அந்த நாடு அழிவை நோக்கிச் செல்லும் வழியாக இறங்க ஆரம்பித்துவிட்டது என்பதாகும்.
எந்த நாடு எனக்கு எதிரிகளே இல்லை எனவும், தன்னை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை என்னும் முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ அது அடிமையாகும் நாட்களை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
இதனுடைய விரிவான விளக்கம் என்னவென்றால் -வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்ய வேண்டும் என்னும் தனிமனித தத்துவத்தை ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து விரிவான கோணத்தில் பார்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சி எந்த விதத்திலும் எல்லையைத் தொட்டுவிடக்கூடாது. முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையே இல்லை.
இது மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது ஏன் என்றால் -
முன்னேற்றம் ஏற்படாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த தேக்க நிலையில் ஏற்படும் இழப்பு இரட்டிப்புச் சரிவை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக ரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் கூற முடியும். ரோமானியர்கள், உலகமே ரோம் நகரம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று எண்ணினார்கள். உலக நாகரிகத்தின் எல்லையே ரோம் தான் என்று கருதினார்கள்.
அதன்பயனாக அவர்கள் உண்பதிலும் உல்லாசம் அனுபவிப்பதிலும் உறங்குவதிலும் தீவிரம் காட்டிய அளவு -உழைப்பதில் காட்டவில்லை. இதன் காரணமாக ரோமப் பேரரசும் அதன் நாகரிகமும் காலப்போக்கில் முகவரி தெரியமலே போய்விட்டது.
நாம் மேற்கொள்ளும் முயற்சி வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும். நமது அதிகபட்சத் திறமையினால் முயற்சியின் பலன் விரைவிலே கிடைத்து விட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.

வெற்றி நிச்சயம்


உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் தான் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் அடைய இயலாது.
ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை”“இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டு அவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”
புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்த வேலையைத் தொடங்கினார். அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.
“நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்.
“கேட்டவற்றைச் சொல்”
பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.
இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர் “இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.
“விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”
புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்
நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமாகச் சில விஷயங்களை நம் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். அவ்வாறு அகற்ற வேண்டிய விஷயங்களில் முதன்மையானது எதிர்மறை சிந்தனை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் நமது மனம் எதைப்பற்றி சிந்திக்கிறதோ அந்தச் சிந்தனையே வெற்றி பெறும். ஒரு இளைஞன் காலியாக உள்ள ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவன் விண்ணப்பிக்கும் போதே சில எதிர்மறையான விஷயங்களைத் தனக்கு முன்னால் வைக்கிறான். பத்தே இடங்கள் தான் காலியாக உள்ளன. பல ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். நமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது. பலர் சிபாரிசுகளோடு வருவார்கள். கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னாலும் சிபாரிசோடு வருபவர்களையே வேலைக்குத் தேர்வு செய்வார்கள். எதிலும் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. இந்த இன்டர்வியூ வெறும் கண்துடைப்புதான். இப்படி பல எதிர்மறையான விஷயங்களையே அந்த இளைஞனின் மனசு யோசிக்கிறது. அவன் சிந்தித்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உண்மையாகிப் போகிறது. இதனால் வேலையும் கிடைக்காமல் போகிறது.
ஒரு விஷயத்தில் இறங்குகிறாம் என்றால் முதலில் நாம் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான விஷயங்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக இருந்தாலும் அந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும். இன்டர்வியூவில் நான் நன்றாக பதில் சொல்லுவேன். இந்த வேலைக்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்று ஒருவன் சிந்திப்பானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். ஆகவே நாம் எப்போதும் வெற்றி கிடைக்குமோ இல்லையோ அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேர்மறையாக சிந்திக்கப்பழகிக் கொள்ள வேண்டும். இது நம் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிக்கும். வெற்றிக்கும் வழி வகுக்கும்.
நாம் அகற்ற வேண்டிய அடுத்த விஷயம் தாழ்வு மனப்பான்மை. ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள்.
இனிநாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சற்றுப்பார்போம்.
காலையில் எழுந்ததும் உங்கள் மனதுக்குள்ளே ஒரு சபதத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் நிச்சயம் எனக்கு நல்லதாக இருக்கும். இன்று நான் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுவேன். நேற்றைய நாளைவிட இன்று அறிவிலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திலோ நான் முன்னேறியவனாக இருப்பேன். இப்படி சபதம் எடுத்துவிட்டு உங்களுடைய நாளைத் துவக்கிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் மனத்தில் புத்துணர்ச்சி உருவாகும். இது உங்கள் சாதனைக்கு வழிவகுக்கும்.
அடுத்ததாக எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமின்றி செய்தால் அதில் வெற்றி பெற இயலாது. ஒரு மனிதன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணி எத்தகைய கடினமானதாக இருந்தாலும் அதை மிகச் சுலபமாக முடிக்கலாம். எதையும் வெறுப்போடு நோக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே வெல்வதற்கே என்று அடிக்கடி உங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பது முதுமொழி. இது உண்மை தான். உடல் நன்றாக இருந்தால் தான் நாம் சாதனைகளைச் சுலபமாகச் செய்ய முடியும் தேர்வுகளுக்காக வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படித்துக் கடைசியில் தேர்வு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் ஒரு மாணவனுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைச் சற்று மனதில் சிந்தித்துப் பாருங்கள். தேர்விற்காக மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நம்மால் சிறந்த முறையில் வாழ முடியும். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்கள் நிச்சயம் உடலுக்கு கேட்டை மட்டுமே விளைவிக்கும். இயற்கையாக விளையும் பழங்கள், பழச்சாறுகள், இளநீர், வீட்டில் செய்யும் உணவு வகைகள் போன்றவற்றை நிறைய சாப்பிடுங்கள். இதனால் எந்த கெடுதலும் விளையாது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் ஆழ்ந்த தூக்கம்.
நமது மூளையில் ஹிப்போகேம்பஸ் என்றொரு முக்கிய பகுதி இருக்கிறது. நமது நினைவாற்றலுக்கு இந்த பகுதியே முக்கிய பங்கு வகுக்கிறது. இரவு நேரங்களில் போதிய அளவிற்கு தூங்காவிட்டால் அது நமது நினைவுத்திறனை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நம்மால் நினைத்த மாத்திரத்தில் மிகச்சுலபமாக தூங்க முடியும். அதற்கென பிரத்யோகமாக சில பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுதுமே வலது பக்கமாக திரும்பிப்படுக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நமது நுரையீரல் இரண்டு பகுதிகளால் ஆனது. இதில் இடதுபக்க நுரையீரலைவிட வலதுபக்க நுரையீரல் அளவில் சற்று பெரியதாகும். நீங்கள் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கும்போது உங்கள் உடலுக்கு அதிக அளவில் பிராண சக்தி கிடைக்கும். இது சிறந்த தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்குத் தரும்.
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார்கள். விரைவில் களைத்துப் போவார்கள். மெல்ல மெல்ல செயலில் ஆர்வம் குன்றத் தொடங்கும். பின்னர் மனதில் சலிப்பு வந்து அமர்ந்து கொள்ளும். ஆகவே தினந்தோறும் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறுமணி நேரமாவது ஆழ்ந்து தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளும் வெற்றி தானாக நம்மைத் தேடிவராது. நாம்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நிச்சயமாகப் பின்பற்றியாக வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களைப் படியுங்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அவர்களின் வாழ்க்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அவர்களைப் போல வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...