November 23, 2013

நான் யார்?

நான் யார்?

கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்து வளர்ந்து மடிந்து போன பூமி இது. இங்கு வரலாறு என்பது மிக சொற்பமே. மனிதனின் வரலாறும் பூமியின் வரலாறும் ஒன்றுதான். பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாய் அல்லது ஒரு குழுவாய் மனிதர்கள் செய்த செயல்கள், எடுத்த முடிவுகள் மற்றும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகள் யாவும் வரலாற்றை உருவாக்கின. இன்றும் அது தொடர்கிறது.

அனைவரும் வரலாற்றை படிக்கின்றனர். ஒருசிலர்தான் அதை படைக்கின்றனர்.

உலகில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், அதிசயங்கள், புரட்சிகள், போர்கள் யாவுமே முதன்முதலில் விதை முளைப்பது தனிமனிதனின் மனதில்தான். நீங்கள் எடுக்கும் எந்த முடிவானாலும், அதன் விளைவு ஒரு வரலாறாகவோ அல்லது ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாகவோ மாறுகிறது.

இங்கே மிக முக்கியமானது முடிவெடுப்பதுதான்.

சரி. நீங்கள் யார்? எதற்காக பிறந்தீர்கள்? உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? நீங்கள் யாருக்காக வாழப்போகிறீர்கள்? உங்களுக்காகவா? உங்கள் குடும்பத்திற்காகவா? உங்கள் சமூகத்திற்காகவா? உங்கள் நாட்டிற்காகவா? அல்லது உங்கள் அழகான காதலிக்காகவா? இதற்கு விடை கிடைத்துவிட்டால்  போதுமானது. நீங்கள் யார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

சிலருக்கு இலட்சியங்கள் அவ்வபோது மாறிக்கொண்டே இருக்கும். முடிவுகளை அடிக்கடி மாற்றும் ஒருவர் பாதைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும்.

சிலர் ஒரே லட்சியத்தில் பல வருடங்கள் வெற்றியடையாமல் இருப்பதுண்டு. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தபோது அவர் தன்னுடைய லட்சியத்தை என்னிடம் கூறினார். அதாவது, அவர் ஒரு அரசு அதிகாரி ஆகவேண்டும் என்பதே அந்த லட்சியம். மீண்டும் பலமுறை அவரை சந்தித்தபோதும் அவர் அதே லட்சியத்தை கூறினார்.

"கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்ருக்கேன் ஜீவா" என்று சில வருடங்களுக்கு முன்பு  நான் சந்தித்த போதும் அதையே கூறினார். ஆகா அவர் தன்னுடைய லட்சியத்தை மாற்றவுமில்லை அடையவுமில்லை. அவர் யார் என்பதும் அவருடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதும் கடைசிவரை அவருக்கு புரியாமலேயே போயிற்று. இப்போது அவர் அரசு வேலைக்கான வயதுவரம்பை கடந்து வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

வெறும் லட்சியத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதற்கான சரியான முயற்சியோ முடிவோ எடுக்கவில்லை எனில், உங்கள் லட்சியம் தண்ணீரின் மேல் எழுதிய எழுத்தாக மட்டுமே இருக்கும்.

நீங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை நீங்களே  கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் வாழ்க்கையின் உண்மையான லட்சியம் அகப்ப்படும்வரையில் கேட்டுக்கொண்டே இருங்கள். உங்களுக்காக சில லட்சியங்களை பட்டியலிடுகிறேன்

உறவுகள் சார்ந்த இலட்சியங்கள்

குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது, காதலியை கைபிடிப்பது, அண்ணன் தம்பிகள் சேர்வது, இழந்த பூர்வீக சொத்தை மீட்பது, அப்பா அம்மாவை உலக சுற்றுலா அனுப்புவது, தங்கையின் திருமணம், குடும்பத்துக்காக ஒரு பெரிய வீடு கட்டுவது அல்லது பிரிந்த உறவுகளை சேர்ப்பது போன்றவை அடங்கும்.

தொழில் அல்லது வேலை சார்ந்த இலட்சியங்கள்

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அல்லது அரசு வேலையில் சேர்வது, குறிப்பிட்ட ஊதியம் பெறுவது, தொழில் வளர்ச்சி பெறுவது, புதிதாக ஏதேனும் கண்டறிவது மற்றும் புதிதாக சாதனை புரிவது போன்றவை அடங்கும்.

பணம் சார்ந்த இலட்சியங்கள்

உங்கள் லட்சியம் எதுவாயினும் அதனூடே பயணிப்பது நம் கண்களுக்கு புலப்படாத பணமும்தான். வாழ்வில் பணம் மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் அறிவர்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை " - திருவள்ளுவர்

"பணம் பத்தும் செய்யும்" - பழமொழி

"காசேதான் கடவுளடா" -  பேச்சுவழக்கு

உண்மையிலேயே உலகின் மாபெரும் சாதனையாளர்கள் ஆகக்கூடிய தகுதிகள் அத்தனையும் இருந்தும் சாதிக்காமல் போனவர்கள் எத்தனையோ! அந்த பட்டியலில் நீங்கள் வேண்டாமே!

இந்த உலகம் மோசமானது என்று குறைசொல்லி நாம் ஒதுங்க முடியாது. ஏனெனில் பல சமயங்களில் நாமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். பணம் இல்லாத ஒரு சாமான்யனிடமும் பெரும் பணம் படைத்த பணக்காரனிடமும் நாம் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. பணம் இல்லாதவன் உண்மையிலேயே நாயை விட கேவலமானவனாகத்தான் கருதப்படுகிறான்.

நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் விழைந்தால், நீங்கள் யார் என்பதை உலகிற்கு உணர்த்த உங்களுக்கு பணம் அவசியம் தேவை. நீங்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கு தேவையான ஒன்று பணம்தான்.

பணம் பெரிதல்ல என்று நினைப்பவர்கள் எவரும் அதை வைத்துக்கொண்டிருப்பவர்கள்தான். மேற்கொண்டு படியுங்கள். இந்த வலைப்பூவின் மற்றபிற பக்கங்கள் பணத்தின் வாசனையை உங்கள் அருகே கொண்டுவரும்.


No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...