வேகமாகச் செல். வேகமாகச் செல். உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றியின் காலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.
தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத் தூதுவர்களே கூடி தங்களைச் சுமந்து செல்வார்கள். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை
தெரியுமா?
மரண தண்டனை!
தெரியுமா?
மரண தண்டனை!
நாம் சில மணி நேரத்தில் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை மாதக் கணக்கில் நடந்து செல்ல வேண்டியிருந்த அந்தக் காலத்திலும் கூட அனாவசிய தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.
அந்தக் காலத்திலுள்ளவர்கள் ஒரு வாரத்தில் செய்யக்கூடிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது-
அன்று அனாவசியத் தாமதத்திற்கு மரண தண்டனை என்றால் இன்று அவ்விதக் குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?
சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசியத் தாமதத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை. எத்தனை பேரரசுகள் சரிந்திருக்கின்றன! எத்தனை முடியரசுகள் கவிழ்ந்திருக்கின்றன!!
எனவேதான் நெப்போலியன் கூறினார் “இழந்து விட்ட ஒவ்வொரு நிமிடமும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது”.
உடனுக்கு உடன் காரியங்களை ஒழுங்காகச் செய்வது போன்று நமக்கு வெற்றி மாலை சூட்டக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
இதே போன்று செய்ய வேண்டியதை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது துன்பப் படுகுழியில் தள்ளக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.
காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் “இப்பொழுதே” என்பது தான். இதுவே வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும்.
பின்பு என்பது தோல்வியின் தோழமைச் சொல். அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகள், ஒத்திப் போடப் பட்டதன் காரணமாக மலைபோல் குவிந்து மலைக்க வைத்துவிடும். இவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒழுங்கீனம் தன்னுடைய கொடிய உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பு இன்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.
செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமலும் வரக்கூடிய மடலுக்கும் பதில் எழுதாமலும் இருப்பது, வாழ்க்கைச் சக்கரத்தை ஓடச் செய்யாமல் செய்து விடும்.
ஒரு வேலையை ஒத்திப் போடுவது என்றால் என்ன? அதைப் புதைகுழியில் போட்டு மூடி விடுவது என்பதுதான். பின்பு பார்ப்போம் என்றால் பின்பு ஒரு போதும் அதனை விட்டுப் பார்ப்பது இல்லை என்பதுதான்.
ஒரு வேலையைச் செய்வது, ஒரு விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடத்தப்படவில்லை என்றால் அது காலம் தவறிய நடவுதானே. காலம் தவறின நடவின் பலன் அதற்கு ஏற்றாற் போலத் தான் இருக்கும். எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கம். தோசையைச் சுடச்சுடச் சாப்பிடும் சுவை அது ஆறிய பின்பு இருக்குமா?
இது போன்றுதான் ஒத்திப் போடப் பட்டிருக்கும் வேலையும் இருக்கும். இதனால் நமக்கும் உற்சாகம் குறைந்து விடுவதோடு அதனுடைய சிறப்புத்தன்மையும் இழந்து விடுகிறது.
நான் வெற்றி அடைந்ததற்குக் காரணம் நான் எப்பொழுதும் தயாராக இருந்தது தான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன்.
பத்து மணிக்கு வேலை செய்வதாயிருந் தால்தான் நான் ஒன்பது மணிக்கே தயாராகிவிடுவேன். எனக்காக வேண்டி நான் யாரையும் ஒரு நிமிடம் கூட காத்திருக்க விடுவதில்லை என்று அவர் விளக்கம் தந்தார். இவ்வளவு குறுகிய நேரத்தில் அதிகமாக வேலையைத் தங்களால் எவ்விதம் செய்ய முடிகிறது என்று சர் வால்ட்டர் ரேலேயிடம் கேட்ட போது…
“நான் எதையும் செய்ய வேண்டி யிருந்தால் அதனை உடனே செய்து முடித்து விடுவேன். இன்றைய வேலையை நான் ஒரு போதும் நாளைக்கு என்று தள்ளிப் போட்டது இல்லை” என்று கூறினார்.
வாழ்க்கையில் முன்னேறியவர்களைப் பார்த்தால் அவர்கள் நேரத்தைச் செலவிடுவதில் சிக்கனக்காரர்களாக இருந்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் கோடீஸ்வரர் கார்னீஜி தன்னைப் பார்க்க விரும்புகிறவர்களை வரவேற்கும் விதமும் தன்னுடைய நேரத்தைச் சிக்கனமாக செலவிடும் முறையும் வியப்பானது. எப்படி என்றால் தன்னைப் பார்க்க வந்தவரைப் புன்முறுவலுடன் வரவேற்பார். பிறகு உடனே வந்த விஷயத்தை விசாரித்து விடுவார். அதற்கு ஆவன செய்வதாகவும் சொல்லுவார். தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்து அவருடன் அதிக நேரம் பேச முடியாமைக்கு வருந்துவதாகக் கூறி அவரை திருப்தியுடன் அனுப்பி வைப்பார். தொழில்துறை அதிபர்களும், சாதனை யாளர்களும் தங்களுடைய நேரத்தைச் சிக்கனமாக செலவிட்டு இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
நேரம் ஒரு மூலதனம் என்பதை அவர்கள் ஒரு நாளும் மறந்தது கிடையாது. இதனையே நாமும் பின்பற்றவேண்டும். அப்பொழுதுதான் நாமும் அவர்களைப் போல ஆக முடியும்.
No comments:
Post a Comment