December 5, 2009

வாழ்க்கையின் உண்மையான வழிகாட்டி

அன்னையே, ஒரு மனிதனின் வாழ்க்கைப்போக்கு அந்தராத்மாவால் வழிகாட்டி இயக்கப்படுகிறதா?

ஆம். ஆனால் மிகப் பெரும்பாலும் அவன் அதைச் சிறிதும் உணர்வதில்லை; அந்தராத்மாதான் அவனுடைய இருப்பை ஒழுங்கமைக்கிறது - ஆனால் முதன்மையான போக்குகளில்தான; ஏனெனில் சிறு விவரங்களிலும் தலையிட வேண்டுமானால் புற ஜீவனுக்கும், அதாவது பிராணமய ஜீவனுக்கும் தூல ஜீவனுக்கும், சைத்திய புருஷனுக்குமிடையே உணர்வுள்ள ஐக்கியம் இருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த ஐக்கியம் இருப்பதில்லை. உதாரணமாக, ஒருவர் பெரிய மனக் குழப்பத்தில் என்னிடம், "சைத்திய புருஷனே, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அந்தராத்மாவிலுள்ள இறைவனே நமது வாழ்க்கையை இயக்குகிறான் என்றால் என்னுடைய தேநீரில் எவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்பதை நிர்ணயிப்பது அவன் தானா?" என்று கேட்டார், இதே வார்த்தைகள். அதற்கு நான் அளித்த பதில், "இல்லை, இப்படிச் சிறு சிறு விவரங்களிலும் தலையிடுவதில்லை."

... நீ உன்னுள்ளே சென்று உனது சைத்திய புருஷனைக் கேட்டு அதையே நீ செய்ய வேண்டியதை முடிவு செய்ய அனுமதித்தால்தான் நீ அதைத் தயக்கமின்றி, நிச்சயத்துடன், சந்தேகங்கள் எழாதபடி செய்ய முடியும். அப்பொழுது நீ செய்ய வேண்டியது இதுதான் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வாய், சந்தேகத்திற்கே இடமிராது; அப்படிச் செய்யும்போதுதான் அந்தத் தெளிவும் உறுதியும் இருக்கும். ஆகவே, உன்னுடைய சைத்திய புருஷன் உணர்வுடனும், எப்போதும் உன்னை வழி நடத்த நீ அனுமதிக்கும்போதுதான் உன்னால் உணர்வுடனும் எப்போதும் சரியான காரியத்தைச் செய்ய முடியும்; அப்பொழுது மட்டுந்தான்.

...உன்னுள் அறியக் கூடியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது, அது உன்னுடைய சைத்தியபுருஷன்தான்; அது தவறு செய்யாது, அது உடனடியாக, கணப்பொழுதில் சொல்லிவிடும்; மறு பேச்சு இன்றி, உன்னுடைய கருத்துக்களையும் விவாதங்களையும் கொண்டு வராமல் அதன் சொல்லைக் கேட்டால் அது உன்னை எது சரியோ அதைச் செய்யச் செய்யும்.

நீ எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்கக் கூடாது, எந்த வேலையைச் செய்ய வேண்டும், எந்த வழியில் செல்ல வேண்டும்? எல்லாச் சாத்தியக் கூறுகளும், நீ கற்றவை அல்லது வாழ்க்கையில் கண்டவை, எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் வரும் யோசனைகள், இவை எல்லாம் உன்னைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும். எதைக் கொண்டு நீ முடிவு செய்வாய்? நான் பேசிக் கொண்டிருப்பது முழு நேர்மை உடையவர்களைப் பற்றி, தப்பான எண்ணங்கள், ஆராய்ந்து பார்க்காத கருத்துடையவர்கள், உண்மையைக் காண முயலாமல் கண்ணை மூடிக் கொண்டு வழக்கத்திலுள்ள விதிகளின்படி நடக்கிறவர்கள் இவர்களைப் பற்றி அல்ல, அவர்களுக்கு அவர்களுடைய மனக் கட்டுமானங்களே உண்மை. அவர்கள் விஷயம் எளிது. அவர்கள் நேரே தங்கள் வழியில் போக வேண்டியதுதான், சுவரில் போய் மோதிக் கொள்வார்கள். ஆனால் மூக்கு நன்றாக நசுங்கும் வரை அதை உணரமாட்டார்கள். மற்றபடி இது மிகக் கடினமானது.

சாதாரணமாக மனிதன் எப்போதும் அஞ்ஞானத்திலேயே வாழ்கிறான். மனம் இருக்கும் இடத்தை ஒளிமனம் (mind of light) பெற்றாலன்றி ஒருவனால் உண்மையான பாதையில் செல்ல முடியாது, முழுமையான உருமாற்றம் ஏற்படுவதற்கு முன் இது இன்றியமையாத ஆயத்தமாகும் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வதன் பொருள் இதுதான்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...