September 17, 2016

இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்

நேர்முகம்
நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் அனைவரும்     விரும்பும்படியும் செய்யும் தொழிலை மேற் கொண்டவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தே நின்றிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக திகழக் கூடியவர் இவர்…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் நூற்பாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் எண்ணற்றோரின் களைப்பை 24 மணி நேரமும் நீக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர்…
வழிப்பயணயத்தில் இருப்பவர்கள் மட்டுமே வந்தமர்ந்து தேநீர் அருந்துவார்கள் என்பதனை வீட்டில் உள்ளவர் களையும் ஆசை கொண்டு நேநீர் அருந்த வைத்த ஆற்றலுக்குரியவர் இவர்…
நம் பொருளை பிறர் சுவைக்கும் பொழுது கொடுக்கும் பணத்திற்கு இது தகும். தரம் சுகாதாரம் இருக்கிறது என மனம் மகிழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி கோவை பேக்கரி உலகின் தலைவராக இருக்கக்கூடியவர் இவர்…
கடினமானது, இதெல்லாம் முடியாது என்கிற எண்ணமெல்லாம் கூடாது. உழைப்பை முறையாகக் கொடுத்தால் இங்கு எதுவும் சாத்தியப்படக்கூடியதுதான் என ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை ஊட்டி வருபவர்…
செய்யும் தொழிலில் இதுதான் எல்லை என்று இருந்து விடாமல் அடுத்தடுத்து நம் ஆற்றலை வெளிக் கொணர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் நம்மால் முடிந்தளவு நாம் வாழும் சமுதாயத்திற்கு சேவைகள் புரிதலும் வேண்டும் என்கிற கொள்கையை சந்திப்பவர்களிடம் தவறாமல் கூறி உற்சாகப்படுத்தி வருபவர்…
தந்தையின் உழைப்பு, தாயின் அரவணைப்பு, உடன் பிறந்தோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, தனக்கென அமைந்த அலுவலர்கள், தொழிலாளர்களின் தொழில் ஈடுபாடு ஆகியவற்றால் “அரோமா” மக்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்கிறது. நாளும் மக்களோடு நாங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்பதே என் தொழில் ஆசை என்ற “அரோமா” திரு.பொன்னுசாமி அவர்களை ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் பல்லவி ராஜா என்கிற கிருஷ்ண பிரசாத் அவர்களுடன் நாம் சந்தித்தோம். இனி அவரோடு நாம்….

உங்கள் இளமைக்காலம்…

கோவை பேரூரை அடுத்துள்ள காளம் பாளையம் என்னும் ஊரில் விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ரங்கசாமி கவுண்டர், அம்மா கண்ணம் மாள். ஒரு அண்ணன் இரண்டு தம்பிகள். நான்கு பேருமே ஆரம்பக் கல்வியை காளம்பாளையத் திலும் உயர்நிலைக் கல்வியை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டாமுத்தூர் உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம்.
அப்பா விவசாயத்துடன் பால் வியாபார மும் செய்து வந்தார். தோட்டம் தோட்டமாக சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று, பால் கறந்து அப்பாலைக் கோவைக்கு கொண்டு வந்து கடை கடையாக வீடு வீடாக விற்பனை செய்து நாள்தோறும் குறைந்த பட்சம் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டியபடி வியாபாரம் செய்து வந்தார். பால் வியாபாரத்தில் சிரமம் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி விவசாயத்தை மட்டுமே கவனிக்க முடியும் என்றுணர்ந்த அப்பா பால் வியாபாரத்தை வேறு ஒருவர் ஏற்றுச் செய்தால் நல்லது என்றார். அப்போது நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே அப்பா விடம் நான் செய்கிறேன் என்றேன். என் படிப்பு பாதிக்கும் என்று கருதி ஒத்துக் கொள்ள மறுத்தார். விடாப்பிடியாக அப்பாவிடம்
பேசி சம்மதம் வாங்கி பால் வியாபாரத்தை துவக்கினேன். அப்போது எனக்கு வயது 16.
கடின வேலையான பால் வியாபாரத்தை 16 வயதில் நீங்கள் ஏற்றுக் கொண்ட போது உங்கள் உடலின் ஒத்துழைப்பும் உள்ளத்தின் ஈடுபாடும் உங்களுக்குள் எந்தளவு இருந்தது?
16வது வயதில் ஒரு  பொறுப்பை ஏற்றுச் செய்யப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தவிர வேறு எண்ணம் எனக்குள் எழவே இல்லை. களைப்பு, சோர்வு என்பதெல்லாம் எனக்குள் இல்லவே இல்லை. என்னுடைய முழு சிந்தனையும் செயலும் அதன் மீதே இருந்தது. அதிகாலை 2 மணிக்கு எழுந்து சைக்கிளில் தோட்டம் தோட்டமாக சென்று பாலைக் கறந்து அதனை 5.30 மணிக்குள் கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு வீடு திரும்பும் போது மணி 11 ஆகி யிருக்கும். காலை உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு அதே போல் பாலைக் கறந்து மாலைக்குள் விற்பனை செய்து விட்டு வீடு போகும்போது இரவு 8 ஆகியிருக்கும். 6 மணிநேரம் மட்டுமே தூக்கம். பல வருடங்கள் இதுபோன்ற அயராத உழைப்பைக் கொடுத்ததின் பலன் தான் இன்றைய ‘அரோமா பேக்கரி’, ‘அரோமா பால்’ போன்றவை எல்லாம்.
‘அரோமா பேக்கரி’ எண்ணம் எப்போது? எப்படி? உதயமானது?
பால் வியாபாரத்தில் என் கடினமாக உழைப்பை சளைக்காமல் தந்த வண்ணம் இருந் தேன். அப்போது கோவை நகரில் அங்கங்கே சாலைகளில் ஒன்றிரண்டு டீக்கடைகள் இருக்கும். அந்த டீக்கடைகளில் பேக்கரி பொருட்களான கேக், பிஸ்கட், பன், ரொட்டி வகைகள் எல்லாம் இருக்காது. பால் வியாபாரத்தின் தொடர்ச்சியாக தரமான பேக்கரி பொருட்களுடன் டீயும் சேர்த்து தரும் வகையில் பேக்கரி கடைகள் அமைத்தால் நன்றாக வியாபாரம் நடக்கும் என்று நம்பினேன். முதன் முதலாக கோவை வைசியாள் வீதியில் 1972ம் ஆண்டு ‘மகாலட்சுமி பேக்கரி’ என்ற பெயரில் கடையைத் துவக்கினேன். முதன் முதலில் கோவையில் உள் அலங்கார அமைப்புடன் (Interior Decoration) பேக்கரியைத் துவக்கிய பெருமை எங்களையே சாரும். 1974ல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ‘அரோமா’ என்கிற பெயரில் துவக்கினேன். அதற்கு பின்பு 6 மாதத்திற்கு ஒரு கடை என தொடர்ந்து கோவையைச் சுற்றி 25 பேக்கரிகளை உருவாக்கி மக்கள் ஆதரவுடன் நன்கு நடத்தி வருகிறோம்.
‘அரோமா’ என்கிற பெயரைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?
‘அரோமா’ என்றால் நறுமணம் என்று பொருள். எங்கள் பேக்கரியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் நறுமணத்துடன் தரமாக கிடைக்கும் என்பதனை எடுத்துக் காட்டவே ‘அரோமா’ என்கிற பெயரை தேர்வு செய்தோம். அதற்கேற்பவே இன்றளவும் பொருட்களைத் தந்து வருகிறோம்.
‘அரோமா பால்’ உருவான விதம்
அன்றாடம் பாலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை கவனித்தேன். பால் வியாபாரம் செய்து வரும் நாமே நுகர்வோருக்கு அருமையான பாலை கைபடாமல் மிகவும் சுகாதார முறையில் தரவேண்டும் என்று எண்ணினேன். அதற்கான செயலில் இறங்கி 1995ல் பாக்கெட் பால் விற்பனையை அறிமுகப் படுத்தினேன். பாலின் பெயரும் ‘அரோமா’ என்றே அமைந்தது. அன்று தொடங்கி இன்று வரை பாலை நுகர்வோருக்கு வேண்டிய, தேவைப்படும் அளவுகளில் பாக்கெட் செய்து தருகிறோம். பால் ‘டோன்டு மில்க்’ ‘ஸ்டேன்டைடைஸ்டு மில்க்’, ‘டபுள் டோன்டு மில்க்’, ‘புல் கிரிப் மில்க்’ என்று விதம் விதமாக மார்க்கெட் செய்து வருகிறோம்.
உங்கள் எதிர்கால லட்சியம்….
சாதாரணமாக தொடங்கிய தொழில்கள் இன்று தமிழ்நாடு, கேரளா என்று விரிந்து பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். மேலும் பாலின் தொடர்ச்சியாக அதன் ‘By Products’ மற்றும் ‘ரெடி-டு-ஈட்’ எனப்படும் உணவு வகைகளையும் செய்யும் எண்ணம் உள்ளது.
“அடுத்த 5 ஆண்டுகளில் நீ எங்கு இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு அதில் நீ முழு மூச்சாக இறங்கு” என்பது என் கொள்கை. அப்படி செய்யும் போது அங்கு வெற்றி மட்டுமே கிட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாகக் கூற விரும்புவது….
எங்கள் நிறுவனத்தின் எந்த வகையான உணவுப்பொருள் என்றாலும் அதன் மூலப் பொருளில் இருந்து பயன்படுத்தப்படும் கரண்டி வரை தரமான, சிறந்த, சுத்தமான  பொருட் களையே பயன்படுத்தி வருவது,

வாடிக்கையாளர்களின் ‘மனம் கனிந்த பாராட்டே எங்கள் விருதுகள்’ என்கிற எண்ணத்தோடு ஒவ்வொருவரும் வேலை செய்வது,
எங்கள் நிறுவன பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாம் வாங்கும் பொருளுக்கு தகுந்த விலைதான் என்று கூறும் வகையில் சரியான விலையில் மட்டுமே பொருட்களைத் தருவது இவைகளே எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்களாகும்.
உங்கள் குடும்பம் குறித்து….
எனது வாழ்க்கைத் துணைவி சுப்புலட்சுமி. இரண்டு மகள்கள். விஜயலட்சுமி விஜயவேல், விமலாதேவி கண்ணன் இருவரும் MBA படித்து முடித்து என்னுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. விஜயவேல் விஜயலட்சுமி அவர்கள் அன்னூரில் முத்தூர் முருகன் நூற்பாலை இயக்குநராகவும், கண்ணன் விமலாதேவி அவர்கள் ஈரோட்டில் பிருந்தாவன உணவக இயக்குநராகவும் இருந்து வருகிறார்கள்.
உங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்வு…
கொடிசியா வளாகத்தில் நடந்த பள்ளி குழந்தைகளுக்கான விழாவில் ஒரே நேரத்தில் 60000 குழந்தைகளுக்கு உணவு வழங்கி ‘Limca Book Guinness’ல் இடம் பெற்றது.

தொழிலில் சந்தித்த இடர்ப்பாடுகள்….

சரியான திட்டமிடலும், ஆர்வமும் அதிகம் இருந்தாலே தொழிலில் இடர்ப்பாடுகள் என்பது எழாது.
மாற்றுத் தொழிலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
இல்லை. உணவுத் தொழில் சார்ந்தே இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மக்களோடு இணைந்திருந்து செய்யும் இத்தொழிலில் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என்பதனால் ஒரு நேர்மையான தொழிலை புண்ணியம் சேர்க்கும் தொழிலை எல்லோரைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தொழில் நிறுவனங்கள் தற்போது பணியாளர்களைத் தக்க வைக்க முடியாமைக்குக் காரணம்….
நேரடித் தொடர்பு இல்லாமை, பெருகி வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலை வாய்ப்புகள் காரணமாகலாம்.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
உடனடியாக சாதித்து விட வேண்டும் என்கிற ஆசையை தவிர்த்து விட்டு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடும் உழைப்பும் கொடுக்கத் தயார் என்றால் எல்லோராலும் வெற்றி பெற முடியும்.
மேலும் இலட்சங்கள் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக் காமல் இலட்சியங் களை வகுத்துக்கொண்டு இடைவிடாது செயல்புரிந்தால் சாதித்து விடலாம்.
தன்னம்பிக்கை குறித்து உங்கள் கருத்து….
உழைப்பால் உயர்ந்தவர்களை நாடறியச் செய்து அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் வளரும் தலைமுறையினருக்கு சோதனை களை தகர்த்துவிட்டு சாதிக்கும் எண்ணத்தை தூண்டி வருகிறது.
தனிமனித வாழ்வு சிறக்க பலவகையிலும் உதவி வருகிறது.
கோவை மாவட்ட பேக்கரி சங்கத் தலைவர் என்ற முறையில் சங்கத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தாங்கள் செய்ய விரும்புவது?
பேக்கரி தயாரிப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகளை சங்கத்தின் மூலமாக நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என விரும்புகிறேன்.
விரைவில் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.

மேலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு ஆலோசனை தரும் விதமாக கோச்சிங் சென்டர் ஒன்றும்  அமைக்கவுள்ளோம்.

நிஜ உலகின் நிழல் மனிதர்கள்

அது ஒரு தேநீரகம் கையில் பைபிளும், கண்களில் அமைதியும் கொண்டு சாந்தமாய்     உள்ளே நுழைந்தார் இளமாறன். மின்விசிறியின் கீழிருந்த நாற்காலியில் அமர்ந்தார். பைபிள் புத்தகத்தை திறந்து மனதால் படிக்கலானார். அப்போது அவர் முன் துறுதுறுவென்ற வாலிபன் ஒருவன் வந்து, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்?” கேட்டான். அவன் சொன்னது காதில் வாங்காமல் பைபிளை படித்து கொண்டிருந்தார் இளமாறன்.
‘நாம் சொன்னது அவர் காதுல விழல போலிருக்கு…’ என்று எண்ணிக் கொண்டு கொஞ்சம் குரல் உயர்த்தி, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்? என்று கேட்டான். சட்டென்று விழிப்பிற்கு வந்தார் இளமாறன். புத்தகத்தை மூடிவிட்டு, “Praise The Lord!” என்றபடி அந்த வாலிபனை பார்த்தார். “சார்!” என்று மறுபடியும் கேள்வி எழுப்ப வாயை திறந்தான் அந்த வாலிபன். “தம்பி! ஒரு டீ! ஒரு காலி கப்!” என்றார் இளமாறன் அதிகாரமாக. “சரி சார்!” என்று அந்த வாலிபனும் உள்ளே சென்றான். மீண்டும் பைபிளினுள் மூழ்கினார் இளமாறன்.
தேநீருடன் வந்தான் அந்த வாலிபன். “சார்!” என்றபடி மரியாதையுடன் தேநீர் மற்றும் ஒரு கோப்பை உடன் வைத்துவிட்டு உள்ளே சென்றான். தேநீர் அருந்திய ஒரு சில நிமிடங்களில், இளமாறன், “தம்பி!” என்று உரக்க குரலில் அலறினார். தேநீரகத்திலுள்ள கண்கள் அனைத்தும் இளமாறனை தான் பார்த்தது. சத்தம் கேட்டு ஓடி வந்தான் அந்த வாலிபன்.  “சார்!” என்றபடி வந்து நின்றான். “என்னப்பா தம்பி! டீ கேட்டா இவ்வளவு சூடா கொடுத்திருக்க? மனுஷன் எப்பிடிப்பா குடிக்கிறது? போ! இத நல்லா சூடாத்தி கொண்டு வா …” என்று திருப்பி அனுப்பினார் இளமாறன். மீண்டும் பைபிளினுள் நுழைந்தார்.
சில விநாடிகளில் தேநீர் வந்தது. ஒருவாய் குடித்துவிட்டு மீண்டும், “என்னப்பா தம்பி! இதுல சர்க்கரை எதுவும் போடலயா? மாட்டுக்கு ஊத்தற தண்ணி மாதிரி இருக்கு…” என்று உரக்க கூறினார் இளமாறன். ஒன்றும் புரியாதவன் போல் நின்றிருந்தான் அவ்வாலிபன். “ஏனப்பா! புரியலையா… நீ நம்புல இல்லை! நீயே குடிச்சுப்பாரு! இதென்ன டீயா இது? வாயில வெக்கிற மாதிரியா இருக்கு?” என்று மேலும் பொறிந்து தள்ளினார். “போ! போய்… சர்க்கரை போட்டு நல்லா… தித்திப்பா… கொண்டு வா! போ!” என்றார். சுற்றியிருந்தவர்கள் அந்த வாலிபனின் முகத்திலிருந்த படபடப்பு கண்டு அனுதாபப்பட்டனர். அவனை இப்படி திட்டிய அந்த முகத்தை பார்க்க முனைந்தனர் அங்கிருந்த சிலர். அந்த முகம் பைபிள் புத்தகத்தை மும்முரமாக படித்து கொண்டிருந்தது.
சர்க்கரையிட்ட தேநீர் இளமாறன் நாவில் தித்திப்பு புலர்த்தியது. தேநீர் அருந்திவிட்டு தன் வாயை கழுவி அதே கோப்பையில் உமிழ போனார் இளமாறன். “சார்! கை கழுவுற இடம் அங்க இருக்கு சார்! என்று பணிவாக சொன்னான் அந்த வாலிபன். அந்த கோப்பையிலேயே உமிழ்ந்துவிட்டு, அந்த வாலிபனை கூர்மையான கண்களால் முறைத்தார். அவனோ தலை குனிந்து போனான். பின் பைபிள் புத்தகத்தை பத்திரமாக எடுத்து துடைத்து தன் பையினுள் வைத்துவிட்டு கிளம்பினார். அப்போது அவரின் கைபேசி அலரியது.
அதை எடுத்து இளமாறன், “ஆ… சொல்லுங்க சார்! நல்லாயிருக்கேன் சார்… சொல்லுங்க! உங்க கம்பெனியில் Human Values பத்தி கருத்தரங்கா… பேஷா கலந்துக்கிறேன்! ஆமா சார்! இந்த உலகத்துல கடைசி கடைசியா என்ன சார் மிஞ்சியிருக்க போகுது … ஒவ்வொரு மனுஷனோட அன்பும் அக்கறையும் தான் … அதுதானே Human Values 3 அடிப்படையே… நான் வந்துருவேன் சார்! கண்டிப்பா…” என்று பேசியபடியே தேநீரகம் விட்டு வெளியேறினார். இளமாறன் உமிழ்ந்த கோப்பையெடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தான் அந்த வாலிபன்.

தோற்றுப் பார்

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த உலகத்தில் தோல்வியை சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழு வெற்றி பெற வேண்டு மானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்.

வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெறஅவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.

உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங் களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கை யையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை தோற்றிருக் கிறார்கள் என்பதை பட்டியலிடுங்கள். வாழ்க்கை யில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இப்போது உங்களுக்குப் புரியும்.

தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர் களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அழித்துவிடும். தோல்விகளை துச்ச மென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறைஇராபர்ட் புரூஸிற்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை அழித்து தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினான்.

எட்வர்டு மன்னரின் இத்தகைய கேவல மான பேச்சைக் கேட்க இராபர்ட் புரூஸ் ஆத்திர மடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்கு தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்த குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும் போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்த சிலந்தி ஆடிக் கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்த சிலந்தி இதற்காக பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையை குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினை சுவற்றில் ஒட்டி தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெற்றி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தனது படைவீரர்களை ஒன்று திரட்டினான்.  இராபர்ட் புரூஸ் இங்கிலாந்து படையினை தோற்கடிக்க வேண்டும் என்றவெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தனது வீரர்களை ஊக்கப்படுத்தி போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்தது போல இராபர்ட் புரூசும் தனது வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களை துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய் பதவி ஏற்றுக் கொண்டான்.

தோற்று விட்டோமே என்று கவலைப் பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்வி களா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை ‘தேசப்பிதா’ என்று அழைக்கிறோம்.

தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர் கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்க மாட்டான்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னா லும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து வெற்றி கண்டார்.

அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.

“ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர் களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

“நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்”..

சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.

ஒவ்வொரு முறைதோற்கும் போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்ல கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...