September 17, 2016

நிஜ உலகின் நிழல் மனிதர்கள்

அது ஒரு தேநீரகம் கையில் பைபிளும், கண்களில் அமைதியும் கொண்டு சாந்தமாய்     உள்ளே நுழைந்தார் இளமாறன். மின்விசிறியின் கீழிருந்த நாற்காலியில் அமர்ந்தார். பைபிள் புத்தகத்தை திறந்து மனதால் படிக்கலானார். அப்போது அவர் முன் துறுதுறுவென்ற வாலிபன் ஒருவன் வந்து, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்?” கேட்டான். அவன் சொன்னது காதில் வாங்காமல் பைபிளை படித்து கொண்டிருந்தார் இளமாறன்.
‘நாம் சொன்னது அவர் காதுல விழல போலிருக்கு…’ என்று எண்ணிக் கொண்டு கொஞ்சம் குரல் உயர்த்தி, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்? என்று கேட்டான். சட்டென்று விழிப்பிற்கு வந்தார் இளமாறன். புத்தகத்தை மூடிவிட்டு, “Praise The Lord!” என்றபடி அந்த வாலிபனை பார்த்தார். “சார்!” என்று மறுபடியும் கேள்வி எழுப்ப வாயை திறந்தான் அந்த வாலிபன். “தம்பி! ஒரு டீ! ஒரு காலி கப்!” என்றார் இளமாறன் அதிகாரமாக. “சரி சார்!” என்று அந்த வாலிபனும் உள்ளே சென்றான். மீண்டும் பைபிளினுள் மூழ்கினார் இளமாறன்.
தேநீருடன் வந்தான் அந்த வாலிபன். “சார்!” என்றபடி மரியாதையுடன் தேநீர் மற்றும் ஒரு கோப்பை உடன் வைத்துவிட்டு உள்ளே சென்றான். தேநீர் அருந்திய ஒரு சில நிமிடங்களில், இளமாறன், “தம்பி!” என்று உரக்க குரலில் அலறினார். தேநீரகத்திலுள்ள கண்கள் அனைத்தும் இளமாறனை தான் பார்த்தது. சத்தம் கேட்டு ஓடி வந்தான் அந்த வாலிபன்.  “சார்!” என்றபடி வந்து நின்றான். “என்னப்பா தம்பி! டீ கேட்டா இவ்வளவு சூடா கொடுத்திருக்க? மனுஷன் எப்பிடிப்பா குடிக்கிறது? போ! இத நல்லா சூடாத்தி கொண்டு வா …” என்று திருப்பி அனுப்பினார் இளமாறன். மீண்டும் பைபிளினுள் நுழைந்தார்.
சில விநாடிகளில் தேநீர் வந்தது. ஒருவாய் குடித்துவிட்டு மீண்டும், “என்னப்பா தம்பி! இதுல சர்க்கரை எதுவும் போடலயா? மாட்டுக்கு ஊத்தற தண்ணி மாதிரி இருக்கு…” என்று உரக்க கூறினார் இளமாறன். ஒன்றும் புரியாதவன் போல் நின்றிருந்தான் அவ்வாலிபன். “ஏனப்பா! புரியலையா… நீ நம்புல இல்லை! நீயே குடிச்சுப்பாரு! இதென்ன டீயா இது? வாயில வெக்கிற மாதிரியா இருக்கு?” என்று மேலும் பொறிந்து தள்ளினார். “போ! போய்… சர்க்கரை போட்டு நல்லா… தித்திப்பா… கொண்டு வா! போ!” என்றார். சுற்றியிருந்தவர்கள் அந்த வாலிபனின் முகத்திலிருந்த படபடப்பு கண்டு அனுதாபப்பட்டனர். அவனை இப்படி திட்டிய அந்த முகத்தை பார்க்க முனைந்தனர் அங்கிருந்த சிலர். அந்த முகம் பைபிள் புத்தகத்தை மும்முரமாக படித்து கொண்டிருந்தது.
சர்க்கரையிட்ட தேநீர் இளமாறன் நாவில் தித்திப்பு புலர்த்தியது. தேநீர் அருந்திவிட்டு தன் வாயை கழுவி அதே கோப்பையில் உமிழ போனார் இளமாறன். “சார்! கை கழுவுற இடம் அங்க இருக்கு சார்! என்று பணிவாக சொன்னான் அந்த வாலிபன். அந்த கோப்பையிலேயே உமிழ்ந்துவிட்டு, அந்த வாலிபனை கூர்மையான கண்களால் முறைத்தார். அவனோ தலை குனிந்து போனான். பின் பைபிள் புத்தகத்தை பத்திரமாக எடுத்து துடைத்து தன் பையினுள் வைத்துவிட்டு கிளம்பினார். அப்போது அவரின் கைபேசி அலரியது.
அதை எடுத்து இளமாறன், “ஆ… சொல்லுங்க சார்! நல்லாயிருக்கேன் சார்… சொல்லுங்க! உங்க கம்பெனியில் Human Values பத்தி கருத்தரங்கா… பேஷா கலந்துக்கிறேன்! ஆமா சார்! இந்த உலகத்துல கடைசி கடைசியா என்ன சார் மிஞ்சியிருக்க போகுது … ஒவ்வொரு மனுஷனோட அன்பும் அக்கறையும் தான் … அதுதானே Human Values 3 அடிப்படையே… நான் வந்துருவேன் சார்! கண்டிப்பா…” என்று பேசியபடியே தேநீரகம் விட்டு வெளியேறினார். இளமாறன் உமிழ்ந்த கோப்பையெடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தான் அந்த வாலிபன்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...