நேர்முகம்
நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் அனைவரும் விரும்பும்படியும் செய்யும் தொழிலை மேற் கொண்டவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தே நின்றிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக திகழக் கூடியவர் இவர்…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் நூற்பாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் எண்ணற்றோரின் களைப்பை 24 மணி நேரமும் நீக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர்…
வழிப்பயணயத்தில் இருப்பவர்கள் மட்டுமே வந்தமர்ந்து தேநீர் அருந்துவார்கள் என்பதனை வீட்டில் உள்ளவர் களையும் ஆசை கொண்டு நேநீர் அருந்த வைத்த ஆற்றலுக்குரியவர் இவர்…
நம் பொருளை பிறர் சுவைக்கும் பொழுது கொடுக்கும் பணத்திற்கு இது தகும். தரம் சுகாதாரம் இருக்கிறது என மனம் மகிழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி கோவை பேக்கரி உலகின் தலைவராக இருக்கக்கூடியவர் இவர்…
கடினமானது, இதெல்லாம் முடியாது என்கிற எண்ணமெல்லாம் கூடாது. உழைப்பை முறையாகக் கொடுத்தால் இங்கு எதுவும் சாத்தியப்படக்கூடியதுதான் என ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை ஊட்டி வருபவர்…
செய்யும் தொழிலில் இதுதான் எல்லை என்று இருந்து விடாமல் அடுத்தடுத்து நம் ஆற்றலை வெளிக் கொணர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் நம்மால் முடிந்தளவு நாம் வாழும் சமுதாயத்திற்கு சேவைகள் புரிதலும் வேண்டும் என்கிற கொள்கையை சந்திப்பவர்களிடம் தவறாமல் கூறி உற்சாகப்படுத்தி வருபவர்…
தந்தையின் உழைப்பு, தாயின் அரவணைப்பு, உடன் பிறந்தோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, தனக்கென அமைந்த அலுவலர்கள், தொழிலாளர்களின் தொழில் ஈடுபாடு ஆகியவற்றால் “அரோமா” மக்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்கிறது. நாளும் மக்களோடு நாங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்பதே என் தொழில் ஆசை என்ற “அரோமா” திரு.பொன்னுசாமி அவர்களை ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் பல்லவி ராஜா என்கிற கிருஷ்ண பிரசாத் அவர்களுடன் நாம் சந்தித்தோம். இனி அவரோடு நாம்….
உங்கள் இளமைக்காலம்…
கோவை பேரூரை அடுத்துள்ள காளம் பாளையம் என்னும் ஊரில் விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ரங்கசாமி கவுண்டர், அம்மா கண்ணம் மாள். ஒரு அண்ணன் இரண்டு தம்பிகள். நான்கு பேருமே ஆரம்பக் கல்வியை காளம்பாளையத் திலும் உயர்நிலைக் கல்வியை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டாமுத்தூர் உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம்.
அப்பா விவசாயத்துடன் பால் வியாபார மும் செய்து வந்தார். தோட்டம் தோட்டமாக சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று, பால் கறந்து அப்பாலைக் கோவைக்கு கொண்டு வந்து கடை கடையாக வீடு வீடாக விற்பனை செய்து நாள்தோறும் குறைந்த பட்சம் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டியபடி வியாபாரம் செய்து வந்தார். பால் வியாபாரத்தில் சிரமம் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி விவசாயத்தை மட்டுமே கவனிக்க முடியும் என்றுணர்ந்த அப்பா பால் வியாபாரத்தை வேறு ஒருவர் ஏற்றுச் செய்தால் நல்லது என்றார். அப்போது நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே அப்பா விடம் நான் செய்கிறேன் என்றேன். என் படிப்பு பாதிக்கும் என்று கருதி ஒத்துக் கொள்ள மறுத்தார். விடாப்பிடியாக அப்பாவிடம்
பேசி சம்மதம் வாங்கி பால் வியாபாரத்தை துவக்கினேன். அப்போது எனக்கு வயது 16.
கடின வேலையான பால் வியாபாரத்தை 16 வயதில் நீங்கள் ஏற்றுக் கொண்ட போது உங்கள் உடலின் ஒத்துழைப்பும் உள்ளத்தின் ஈடுபாடும் உங்களுக்குள் எந்தளவு இருந்தது?
16வது வயதில் ஒரு பொறுப்பை ஏற்றுச் செய்யப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தவிர வேறு எண்ணம் எனக்குள் எழவே இல்லை. களைப்பு, சோர்வு என்பதெல்லாம் எனக்குள் இல்லவே இல்லை. என்னுடைய முழு சிந்தனையும் செயலும் அதன் மீதே இருந்தது. அதிகாலை 2 மணிக்கு எழுந்து சைக்கிளில் தோட்டம் தோட்டமாக சென்று பாலைக் கறந்து அதனை 5.30 மணிக்குள் கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு வீடு திரும்பும் போது மணி 11 ஆகி யிருக்கும். காலை உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு அதே போல் பாலைக் கறந்து மாலைக்குள் விற்பனை செய்து விட்டு வீடு போகும்போது இரவு 8 ஆகியிருக்கும். 6 மணிநேரம் மட்டுமே தூக்கம். பல வருடங்கள் இதுபோன்ற அயராத உழைப்பைக் கொடுத்ததின் பலன் தான் இன்றைய ‘அரோமா பேக்கரி’, ‘அரோமா பால்’ போன்றவை எல்லாம்.
‘அரோமா பேக்கரி’ எண்ணம் எப்போது? எப்படி? உதயமானது?
பால் வியாபாரத்தில் என் கடினமாக உழைப்பை சளைக்காமல் தந்த வண்ணம் இருந் தேன். அப்போது கோவை நகரில் அங்கங்கே சாலைகளில் ஒன்றிரண்டு டீக்கடைகள் இருக்கும். அந்த டீக்கடைகளில் பேக்கரி பொருட்களான கேக், பிஸ்கட், பன், ரொட்டி வகைகள் எல்லாம் இருக்காது. பால் வியாபாரத்தின் தொடர்ச்சியாக தரமான பேக்கரி பொருட்களுடன் டீயும் சேர்த்து தரும் வகையில் பேக்கரி கடைகள் அமைத்தால் நன்றாக வியாபாரம் நடக்கும் என்று நம்பினேன். முதன் முதலாக கோவை வைசியாள் வீதியில் 1972ம் ஆண்டு ‘மகாலட்சுமி பேக்கரி’ என்ற பெயரில் கடையைத் துவக்கினேன். முதன் முதலில் கோவையில் உள் அலங்கார அமைப்புடன் (Interior Decoration) பேக்கரியைத் துவக்கிய பெருமை எங்களையே சாரும். 1974ல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ‘அரோமா’ என்கிற பெயரில் துவக்கினேன். அதற்கு பின்பு 6 மாதத்திற்கு ஒரு கடை என தொடர்ந்து கோவையைச் சுற்றி 25 பேக்கரிகளை உருவாக்கி மக்கள் ஆதரவுடன் நன்கு நடத்தி வருகிறோம்.
‘அரோமா’ என்கிற பெயரைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?
‘அரோமா’ என்றால் நறுமணம் என்று பொருள். எங்கள் பேக்கரியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் நறுமணத்துடன் தரமாக கிடைக்கும் என்பதனை எடுத்துக் காட்டவே ‘அரோமா’ என்கிற பெயரை தேர்வு செய்தோம். அதற்கேற்பவே இன்றளவும் பொருட்களைத் தந்து வருகிறோம்.
‘அரோமா பால்’ உருவான விதம்
அன்றாடம் பாலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை கவனித்தேன். பால் வியாபாரம் செய்து வரும் நாமே நுகர்வோருக்கு அருமையான பாலை கைபடாமல் மிகவும் சுகாதார முறையில் தரவேண்டும் என்று எண்ணினேன். அதற்கான செயலில் இறங்கி 1995ல் பாக்கெட் பால் விற்பனையை அறிமுகப் படுத்தினேன். பாலின் பெயரும் ‘அரோமா’ என்றே அமைந்தது. அன்று தொடங்கி இன்று வரை பாலை நுகர்வோருக்கு வேண்டிய, தேவைப்படும் அளவுகளில் பாக்கெட் செய்து தருகிறோம். பால் ‘டோன்டு மில்க்’ ‘ஸ்டேன்டைடைஸ்டு மில்க்’, ‘டபுள் டோன்டு மில்க்’, ‘புல் கிரிப் மில்க்’ என்று விதம் விதமாக மார்க்கெட் செய்து வருகிறோம்.
உங்கள் எதிர்கால லட்சியம்….
சாதாரணமாக தொடங்கிய தொழில்கள் இன்று தமிழ்நாடு, கேரளா என்று விரிந்து பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். மேலும் பாலின் தொடர்ச்சியாக அதன் ‘By Products’ மற்றும் ‘ரெடி-டு-ஈட்’ எனப்படும் உணவு வகைகளையும் செய்யும் எண்ணம் உள்ளது.
“அடுத்த 5 ஆண்டுகளில் நீ எங்கு இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு அதில் நீ முழு மூச்சாக இறங்கு” என்பது என் கொள்கை. அப்படி செய்யும் போது அங்கு வெற்றி மட்டுமே கிட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாகக் கூற விரும்புவது….
எங்கள் நிறுவனத்தின் எந்த வகையான உணவுப்பொருள் என்றாலும் அதன் மூலப் பொருளில் இருந்து பயன்படுத்தப்படும் கரண்டி வரை தரமான, சிறந்த, சுத்தமான பொருட் களையே பயன்படுத்தி வருவது,
வாடிக்கையாளர்களின் ‘மனம் கனிந்த பாராட்டே எங்கள் விருதுகள்’ என்கிற எண்ணத்தோடு ஒவ்வொருவரும் வேலை செய்வது,
எங்கள் நிறுவன பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாம் வாங்கும் பொருளுக்கு தகுந்த விலைதான் என்று கூறும் வகையில் சரியான விலையில் மட்டுமே பொருட்களைத் தருவது இவைகளே எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்களாகும்.
உங்கள் குடும்பம் குறித்து….
எனது வாழ்க்கைத் துணைவி சுப்புலட்சுமி. இரண்டு மகள்கள். விஜயலட்சுமி விஜயவேல், விமலாதேவி கண்ணன் இருவரும் MBA படித்து முடித்து என்னுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. விஜயவேல் விஜயலட்சுமி அவர்கள் அன்னூரில் முத்தூர் முருகன் நூற்பாலை இயக்குநராகவும், கண்ணன் விமலாதேவி அவர்கள் ஈரோட்டில் பிருந்தாவன உணவக இயக்குநராகவும் இருந்து வருகிறார்கள்.
உங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்வு…
கொடிசியா வளாகத்தில் நடந்த பள்ளி குழந்தைகளுக்கான விழாவில் ஒரே நேரத்தில் 60000 குழந்தைகளுக்கு உணவு வழங்கி ‘Limca Book Guinness’ல் இடம் பெற்றது.
தொழிலில் சந்தித்த இடர்ப்பாடுகள்….
சரியான திட்டமிடலும், ஆர்வமும் அதிகம் இருந்தாலே தொழிலில் இடர்ப்பாடுகள் என்பது எழாது.
மாற்றுத் தொழிலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
இல்லை. உணவுத் தொழில் சார்ந்தே இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மக்களோடு இணைந்திருந்து செய்யும் இத்தொழிலில் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என்பதனால் ஒரு நேர்மையான தொழிலை புண்ணியம் சேர்க்கும் தொழிலை எல்லோரைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தொழில் நிறுவனங்கள் தற்போது பணியாளர்களைத் தக்க வைக்க முடியாமைக்குக் காரணம்….
நேரடித் தொடர்பு இல்லாமை, பெருகி வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலை வாய்ப்புகள் காரணமாகலாம்.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
உடனடியாக சாதித்து விட வேண்டும் என்கிற ஆசையை தவிர்த்து விட்டு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடும் உழைப்பும் கொடுக்கத் தயார் என்றால் எல்லோராலும் வெற்றி பெற முடியும்.
மேலும் இலட்சங்கள் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக் காமல் இலட்சியங் களை வகுத்துக்கொண்டு இடைவிடாது செயல்புரிந்தால் சாதித்து விடலாம்.
தன்னம்பிக்கை குறித்து உங்கள் கருத்து….
உழைப்பால் உயர்ந்தவர்களை நாடறியச் செய்து அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் வளரும் தலைமுறையினருக்கு சோதனை களை தகர்த்துவிட்டு சாதிக்கும் எண்ணத்தை தூண்டி வருகிறது.
தனிமனித வாழ்வு சிறக்க பலவகையிலும் உதவி வருகிறது.
கோவை மாவட்ட பேக்கரி சங்கத் தலைவர் என்ற முறையில் சங்கத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தாங்கள் செய்ய விரும்புவது?
பேக்கரி தயாரிப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகளை சங்கத்தின் மூலமாக நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என விரும்புகிறேன்.
விரைவில் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.
மேலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு ஆலோசனை தரும் விதமாக கோச்சிங் சென்டர் ஒன்றும் அமைக்கவுள்ளோம்.
No comments:
Post a Comment