டுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்தக் காரியம் நீர்த்துப் போகக் கூடாது என்பதில் கவனமாக இருந்து விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு வந்து சாதித்துக் கொண்டிருப்பவர்…
தான் எடுத்த வேலை ஒவ்வொன்றும் முடிவடையும் போது அது தான் உலகத்தில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று செயல்பட்டு தரமான பொருட்களையே உற்பத்தி செய்து வருபவர்…
ஆரம்பத்தில் தொழில் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்திருந்தாலும் தன்னுடைய ஈடுபாட்டின் காரணமாக ஒவ்வொரு விசயத்தையும் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இந்தத் தொழிலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒரு சின்ன தொழில்சாலையாக ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே ‘டெக்னாலஜி’யில் சிறந்த மெசின்களைப் புகுத்தி மிகச்சிறந்த தர நிர்ணயத்துடன் கூடிய துணிகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமாக கட்டமைத்துள்ளவர்…
தொழில் ஆரம்பித்த போது இவரிடம் இருந்தது எல்லாம் குறைந்த முதலீடும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தான். அதை வைத்துக்கொண்டு ஃபேப் டெக் இன்டர்நேசனல் என்ற சிறு கம்பெனியை உருவாக்கி, இன்று ஃபேப் ஃபிட் அப்பேரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபேப் டெக் இன்டர்நேசனல் ஹோசரிஸ் பிரைவேட் லிமிடெட், காலர் மேட் என்று விரிவடைந்த நான்கு நிறுவனங்களில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். விவேகானந்தன் அவர்களை ஒரு மாலை பொழுதில் சந்தித்தோம்.
அப்போது தன்னுடைய இளமைக்காலம், விவசாயத்தைத் தொடர்ந்து தொழில் துறையில் ஈடுபட்டு சாதனை புரிந்தது, அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பின்னலாடைத் தொழிலில் தற்போது இருக்கும் நெருக்கடிகளை சமாளித்து எப்படி சமாளித்து சாதித்து வருகிறார் என்று தன்னுடைய பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். சாதிக்க பெரிய அளவில் பணமோ, பின்புலமோ எதுவும் தேவையில்லை. சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும் இருந்தாலே அனைவரும் சாதனையாளராக முடியும் என்ற அவரின் நேர்முகம் அவர் மொழியிலேயே…
உங்களைப்பற்றி…
கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுல்தான் பேட்டையில் திரு. S.R. நாராயணசாமி, திருமதி. பத்மாவதி அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். பள்ளிப்படிப்பை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த லட்சுமி நாயக்கன் பாளையத்தில் உள்ள எஸ்.ஆர்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 1971ம் ஆண்டு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் எனது அப்பா தனக்கு உதவியாக விவசாயத்தை பார்க்க உதவிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
எனக்கோ சொந்தத் தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்று விருப்பம். அப்பாவுக்கு விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை. எதை மேற்கொள்வது என்று சிந்தனையில் ஆழ்ந்த போது எனது அப்பாவுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டு விவசாயம் செய்தேன். அந்த காலகட்டத்தில் தான் விவசாயத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய வீரிய ரக ஒட்டு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும்போது மகசூல் அதிகரித்தது.
நானும் அந்த புதிய வீரிய ரக ஒட்டு விதைகளில் சோளம், பருத்தி போன்றவற்றை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்துக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளில் அந்த விவசாயத்தில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.
புதிய புதிய நோய்களும், புழுக்களும் தோன்ற லாபகரமான தொழிலாக அதுவரை இருந்துவந்த வேளாண்மை மெல்ல நட்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக மாறியது. உடனடியாக விழித்துக்கொண்ட நான் சோளம், பருத்தி போன்ற பயிர்களைப் பயிரிடுவதைத் தவிர்த்து தென்னை வளர்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 90 சதவீத நிலத்தை தென்னை சாகுபடிக்கே பயன்படுத்தினேன்.
தென்னை சாகுபடியை மேற்கொண்டதால் வேளாண்மையில் ஈடுபடும் நேரம் குறைந்தது. அதிக நேரம் ஓய்வு கிடைத்தது. அதைப் பயனுள்ள விதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் என் ஆரம்பகால குறிக்கோளான தொழில் தொடங்குவது என்ற எண்ணம் மெல்ல துளிர்த்தது.
தொழில்தொடங்கமுடிவெடுத்ததும்நீங்கள்முதலில்தேர்ந்தெடுத்ததொழில்குறித்து…
எனது உறவினர்களும், நண்பர்களும் தொழில் நிமித்தமாக கோவை மற்றும் திருப்பூருக்கு சென்று வருவதைக் கவனித்த நான் அந்த ஊர்களுக்குச் சென்று தொழில் தொடங்கலாமா என்று யோசித்தேன்.
பின்பு சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கலாம் என எண்ணி காயர் பேக்டரி தொழில் தொடங்க முடிவெடுத்து அதற்காக ஒரு இடத்தையும் தேர்வு செய்து பாலக்கால் போடப்போன போது குழி தோண்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்தபோது, அந்தக் கல்லுக்குக் கீழே பாம்பு இருந்தது. ‘சகுணம் சரியில்லை; இந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம்; மாற்று ஏற்பாடுகளை செய்யலாம்’ என்று அப்பா கூறியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இந்நிகழ்வால் எனக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
ஆறு மாதங்கள் பொறுமையாக காத்திருந்த நான் மீண்டும் சொந்த ஊரில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வேறு புதிய இடம் தேர்வு செய்தேன். இடம் தேர்வு செய்தது மட்டுமே நடந்தது. மேற்கொண்டு மற்ற விஷயங்கள் எதுவும் சரியாக நடைபெறாததால் அந்த முறையும் தொழில் தொடங்கும் என் முயற்சி தடைபட்டது. சரி, இந்த இடத்தில் தொழில் தொடங்குவது இயலாத காரியம் என்று முடிவெடுத்து திருப்பூர் சென்றேன்.
1987ம் ஆண்டு திருப்பூர் வந்த நான் மணி என்கின்ற நாகராஜன் என்பவருடன் பல தொழில் சாலைகளுக்கு சென்று பார்வையிட்டு அவை எப்படி செயல்படுகின்றன என்பதை உள்வாங்கினேன். தொடர்ந்து, அப்போது மிக நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த டேபில் பிரிண்டிங் (Table Printing) செய்யலாம் என்று முடிவெடுத்தேன். குறைந்த முதலீட்டில், வாடகைக்கு ஒரு இடத்தைப் பிடித்து முதல் முயற்சியாக ஒரே ஒரு டேபிளைக் கொண்டு ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யத் தொடங்கினேன்.
அடுத்த ஆண்டே மற்றொரு டேபிள் வாங்கி என்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்தேன். இரண்டு டேபிளைக் கொண்டு செய்த ஸ்கிரீன் பிரிண்டிங்கால் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது.
ஓரளவுவருமானம்அதைத்தாண்டிபேரளவுவருமானம்தேடஅடுத்துநீங்கள்எடுத்தமுயற்சிகள்குறித்துசொல்லுங்களேன்…
ஸ்கிரீன் பிரிண்டிங்கைத் தாண்டி வேறு என்ன செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது புதிதாக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிட்டிங் மெசினைப் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது.
முதலில் 12 உள்நாட்டு நிட்டிங் மெசினைக் கொண்டு நிட்டிங் தொழிலைத் தொடங்கினேன். டேபிள் பிரிண்டிங், நிட்டிங் மெசின் என்று இரண்டில் இருந்தும் நான் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, திரும்ப விவசாயத்துக்கே சென்றுவிடலாமா? என்று கூட யோசித்தேன். அப்போதுதான் நிட்டிங் மெசின் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது.
1990ல் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் பலனாக புதிய தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட நிட்டிங் மெசின் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அதைப் பயன்படுத்தி தரமான முறையில் நிட்டிங் செய்யப்படும் சூழல் அதிகரித்தது.
நாமும் அத்தகைய நிட்டிங் மெசினை இறக்குமதி செய்யலாம் என்று முடிவெடுத்த நான் 1993ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நிட்டிங் மெசினைக் கொண்டு நிட்டிங் செய்தேன்.
இறக்குமதி செய்யப்பட்ட அந்த நிட்டிங் மெசின் மூலம் மிக விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் வேலை முடித்து கொடுக்கப்பட்டதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வரவேற்பைப்பெற்ற தங்கள்நிறுவனத்தின்அடுத்தகட்டவளர்ச்சியாகநீங்கள்மேற்கொண்டசெயல்பாடுகள்குறித்து…
தமிழ்நாடு முதலீட்டுக் கழகத்தின் (TIIC) உதவியுடன் சிறிய அளவில் இருந்த எங்கள் தொழிற்சாலை 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் 25 மெசின்களுடன் இயங்க ஆரம்பித்தது. தொடர்ந்து நல்ல நிலையில் சென்றதால் 2003ல் திருப்பூருக்கு அருகில் இருக்கும் வீரபாண்டியில் இரண்டாவது யூனிட்டாக ஃபேப் ஃபிட் அப்பேரல்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டை ஆரம்பித்தோம். தொடர்ந்து எங்கள் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியாக காலர் நிட்டிங், காம்பேக்டிங், ரைசிங், சூடிங், சென்டரிங், பிரிண்டிங் என்று அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தது.
2009ம் ஆண்டு டையிங் என்ற நிலைக்கு உயர்ந்தோம். இன்று நூலில் இருந்து துணியாக உருவாக்கப்பட்டு வெளிவரும் நிலை வரை படிப்படியாக உயர்ந்து இருக்கிறோம்.
இப்படிப்படிப்படியாகஉயர்ந்தநிலையைஎட்டக்காரணமாகஇருந்ததுஎன்றுநீங்கள்சொல்லவிரும்புவது…
எளிதில் விட்டுக்கொடுக்காத விடாமுயற்சியும், தளர்ந்து போகாத தன்னம்பிக்கையும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தொலைநோக்கும் தான். மேலும் ஒவ்வொரு நிலையிலும் புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதைப் பயன்படுத்திக் கொள்வதும், பொருளின் தரம், அளவு போன்றவை சரியாக அமைய வேண்டும் என்று செயல்பட்டதும் பின்னலாடை தயாரிப்பவர்களுடன் (Exporter) ஒருங்கிணைந்து செயல்பட்டதும் ஒரு காரணம்.
ஆரம்ப நிலையில் இருந்த ஒரு தொழில் துறையில் டெக்னாலஜி அப்படி ஒன்றும் முன்னேறியிருக்காது. தர நிர்ணயங்களும் ஏற்பட்டிருக்காது. அந்த சமயத்தில் தர நிர்ணயத்துக்கும், டெக்னாலஜிக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதும் ஒரு முக்கியக் காரணம். சின்னத் தொழிலதிபராக இருப்பவர், பெரிய தொழிலதிபராக மாறுவதற்கு முதல் தேவை தன் பிசினஸை வளர்ப்பதுடன் கூடவே தொழில் நுட்பத்தையும் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆர்வத்துடன் என் தொழிலை பல நிலைகளிலும் விரிவுபடுத்தியதும் ஒரு காரணம்.
ஒரு சின்ன அறையில் கம்பெனி நடத்தி, டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல் இருந்தவர்கள் சின்ன அளவிலேயே நின்றுவிட்டார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த நான் அடுத்த கட்டத்துக்கு ஒரே தாவாகத் தாவி புதிய டெக்னாலஜி உள்ள மெசின்களை இறக்குமதி செய்து, தொழில்நுட்ப திறமைசாலிகளைக் கண்டுபிடித்து அவர்களை எங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு செயல்பட்டதும் ஒரு காரணம். இதைத் தவிர தரக்கட்டுப்பாடு, தொடர்ந்து ஏற்படுத்திய புதுமைகள், வேலைக்குப் பணியாளர்களை சேர்ப்பதில் இருந்து வருடக் கடைசியில் பணி மதிப்பீடு செய்வது வரை ஒவ்வொரு விசயத்திலும் மிக நுணுக்கமான கவனம் மற்றும் ஈடுபாட்டுடன் செயல்பட்டது என்று இந்த உயர்ந்த நிலையில் இருப்பதற்கு பல காரணங்களைப் பட்டியலிடலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிறுவனமாக இருந்ததை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட்டதால் கிடைத்த பலனாக நீங்கள் கருதுவது…
ஒரு துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதையை மாற்றும் முயற்சி என்பது பல சவால்கள் நிறைந்தது. சில திட்டங்களில் குறிப்பிட்ட சவால்கள் மிகத் தீவிரமாகச் செயல்படும். உதாரணமாக, நிட்டிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம், டையிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம், காம்பேக்டிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம் என்று ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிறுவனமாக இருந்ததால் நூலில் இருந்து முழுமை பெற்ற துணியாக வரும்வரை கிட்டத்தட்ட 5 அல்லது 6 இடங்களுக்குக் கொண்டு சென்று எடுத்துவரும் நிலை இருந்தது. இது சற்று கடினமான பணியாகவே இருந்தது.
இப்படி பல பகுதிகளாக பிரித்து செய்வதில் பல சவால்களை எதிர்கொண்டோம். ஏதாவது ஒரு நிலையில் மாற்றங்களை, புதுமைகளைச் செய்ய முயலும்போது எதிரில் பல சவால்கள் எழும். அவற்றுடன் தொடர்ந்து போராடுவது சற்றுகடினம்.
இதனால் தான் தற்போது பல நிறுவனங்கள் நூலை பெற்று முழுமை பெற்ற துணியாக கொடுப்பது வரையுள்ள அனைத்துப் பணிகளும் செய்யும் விதமாக அனைத்து இயந்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. நாங்களும் அப்படித்தான் அனைத்து இயந்திரங்களையும் வைத்திருக்கிறோம். எனவே வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலை மாறி ஒரே இடத்தில் அனைத்துப் பணிகளும் நடைபெறும் வளர்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து நிலைகளும் ஒரே நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெறுவதால் எந்த நிலையில் என்ன பிரச்சனை ஏற்படுகிறது? அதனால் துணியில் எத்தகைய மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தவிர்க்க முடிகிறது.
இந்தியாவில்தற்பொழுதுபனியன்துணிகளின்தேவைஅதிகரித்திருக்கிறதா?
ஆரம்ப காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் பனியன் துணிகளுக்கு தேவை அதிகமாக இருந்தது. இந்தியாவில் உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். தற்போது இந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்லலாம். உதாரணமாக கடந்த ஆண்டு ஏற்றுமதி 13,000 கோடி என்றால் உள்நாட்டில் விற்பனை 6,000 கோடியாக இருப்பதைச் சுட்டிக் காட்டலாம்.
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட ‘டி-சர்ட்’ போடும் நிலை வந்துவிட்டது. எவ்வளவோ துணிகள் இருந்தால் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது புதிதாக ‘டி-சர்ட்’ எடுத்து அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும் போது உள்நாட்டுச் சந்தையில் இதற்கான தேவை அதிகரிப்பதையே காட்டுகிறது.
தற்போதுஇந்தத்தொழிலில்உள்ளபிரச்சனைகளாகநீங்கள்பார்ப்பது…
இந்தத் தொழில் மட்டுமின்றி அனைத்துத் தொழில்களிலுமே பிரச்சனைகள் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது வேலையாட்கள் பற்றாக்குறை. உள்ளூரில் தேவையான ஆட்கள் கிடைக்காததால் வெளிமாநிலங்களில் குறிப்பாக பீஹார், ஒரிஸா, அஸ்ஸாம் போன்ற வட மாநிலத்தவரை வேலைக்கு சேர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உள்ளூர் பிரச்சனை இதுவென்றால் உலக அளவில் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஏற்றுமதியில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பணத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெருமளவில் இந்தத் தொழிலைப் பாதிக்கச் செய்கிறது.
மற்றொரு முக்கிய பிரச்சனை டையிங் செய்வதால் ஏற்படும் மாசு, சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டால் இந்த தொழில் பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்தது. தற்போது இந்தத் துறை இந்த பிரச்சனைகளில் இருந்தெல்லாம் வெளிவந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஆட்கள் பற்றாக்குறைக்கு புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தியை மேற்கொள்கிறோம்.
சாயநீரைசுத்திகரிப்புசெய்வதில்திருப்பூரின்தற்போதையநிலை…
தற்போது திருப்பூரில் உள்ள 18 சுத்திகரிப்பு நிலையங்களில் 16 நிலையங்கள் பூஜ்ஜிய அளவு வெளியேற்றம் (Zero Level Discharge) நிலையில் இயங்குகின்றன. இது உலகத்தில் சிறந்த சுத்திகரிப்பு என்று வெளிநாடுகளில் இருந்து வந்த அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது. டையிங் செய்வதிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அச்சுறுத்தல் தற்போது இல்லை.
பொதுவாக 2000 டிடிஎஸ் உப்புத் தன்மை கொண்ட நீரை ஆற்றிலோ அல்லது கடலிலோ கலக்குமாறு செய்யலாம் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்று நாங்கள் ஒரு சொட்டு நீரைக்கூட ஆற்றில் கலப்பதில்லை.
சாயக்கழிவு நீரில் இருந்து முதலில் கலரைப் பிரித்து எடுத்துவிட்டு, தண்ணீரின் உப்புத் தன்மையை 90 சதவீதத்திற்கு குறைத்து விடுகிறோம். அந்த தண்ணீரை மீண்டும் நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம். எஞ்சியுள்ள 10 சதவீத உப்புத் தண்ணீரும் படிகங்களாகவே (Solid) இருப்பதால் அதை ஆவியாக்கிவிடுவதால் சாயக்கழிவு நீர் எந்த விதத்திலும் கடலிலோ, ஆற்றிலோ தற்போது கலப்பதில்லை.
இந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை தனி ஒரு நிறுவனமாக இருந்து ஒரு சிலர் செயல்படுத்துகின்றனர். இதற்கு முதலீடும் அதிகமாகத் தேவைப்படும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள டையிங் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கி பயன்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகிறது.
தங்களின்இந்தவளர்ச்சிக்குத்துணைநின்றவர்களாகநீங்கள்சொல்லவிரும்புபவர்கள்…
என்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு உதவியவர்களில் மிக முக்கியமான நபர் என்னுடைய மைத்துனர் திரு. செந்தில்குமார். அவரின் ஈடுபாடும், கடின உழைப்பும் என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்து உதவியது.
2007ல் தன்னை எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்ட எனது மூத்த மகன் திரு. கிருபாகரின் தொலைநோக்குச் சிந்தனையால் நிறுவனம் பல கட்டங்களைத் தாண்டி வளர்ச்சியடைந்தது. புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் உள்ளே நுழைந்து அவற்றை சரியாகப் பயன்படுத்தி வளர்ச்சி கண்ட எனது இளைய மகன் திரு. மிதுன் பாலாஜி அவர்களும் 1994 முதல் இன்று வரை எங்களோடு இணைந்து இரவு பகல் பாராது அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர்களின் ஈடுபாடு இந்த நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த நிறுவனமாக இருந்தாலும் நேரடிக் கண்காணிப்பு இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும் என்பதால் இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நிலையையும் நேரடியாகக் கண்காணித்து செயல்படுகிறார்கள். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும்காலங்களில்நீங்கள்செய்யவிரும்புவது…
ஒரு துணி உருவாக்கப்படுவதில் தற்போது 100 சதவீத பணிகளை நிறைவு செய்யும் நிறுவனமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எங்களின் இலக்காக நிர்ணயித்து இருப்பது ‘கார்மெண்ட்ஸ்’ ஏற்றுமதி செய்வது என்பது தான். அதுவும் விரைவாக செய்வோம்.
ஒருவர்குறிக்கோளை, இலக்கைஎளிதில்அடையநீங்கள்தரும்ஆலோசனை…
வெற்றி பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், அதைச் செயல்படுத்த கடின உழைப்பு, இடையில் ஏற்படும் தோல்விகளை வீழ்ச்சியாக நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் மதித்து வேலை வாங்கும் தலைமைப் பண்பு என்று உங்களை நீங்கள் வளர்த்திக் கொண்டால் நீங்களும் உங்கள் குறிக்கோளை, இலக்கை எளிதில் அடைய முடியும். ஆரம்பத்தில் தோல்விகள் வரலாம்; ஆனால் கடைசியில் எப்படியும் வெற்றி கிடைத்துவிடும்.
நேர்மறை மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மால் எது முடியும், எது முடியாது என்பதன் எல்லைகளை விஸ்தரிக்க இது போன்ற மனம்தான் வேண்டும். இந்த மனநிலை மட்டும் வந்துவிட்டால் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியமானவை. இப்படி நேர்மறை எண்ணத்துடன் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் நம்முடைய இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை. நம் ஆளுமையையும் ஒரேயடியாக மாற்றி விடுகிறது. சாதிக்க வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன் அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடும்.
எதிலும் புதுமையைப் புகுத்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக எதையும் செய்ய முயற்சிப்பதுகூட இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் முதல் சாக்கு, ‘இதைச் செய்யத் தேவையான திறமைகள் நம்மிடம் இல்லை’. ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால் இந்த சவால்கள்தான் திறமையை வளர்க்கும். திறமையை கையில் வைத்துக்கொண்டு யாரும் சவால்களைத் தேடிப்போவதில்லை. இந்நிலை மாறவேண்டும். சவால்களை எதிர்கொண்டு சாதிக்க முயற்சிக்க வேண்டும்.
இதைத் தவிர எந்த ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதுபற்றி அறிவை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டு ஈடுபடுவது நல்லது. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தொழில் பயிற்சி பெற வேண்டும். அந்த பயிற்சியில் இருந்து கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தொழில் தொடங்கினால் அவற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளையும், சிக்கல்களையும் எளிதில் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து.
தன்னம்பிக்கைகுறித்து…
வாழ்க்கையில் ஏமாற்றம், இயலாமை, விரக்தி ஏற்படக் காரணம் தன்னைப் பற்றிய ஒரு குறுகிய மனப்பான்மை தான். தன்னைப் பற்றி நம்பிக்கையுடன் செய்ய முடியும், சாதிக்க முடியும், நம்மால் முடியும் என்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சாதனையாளர்கள் பின்னே பார்க்கும் பொழுது அவர்களுடைய விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர்மை அனைவரையும் அரவணைத்து வந்தது நம் கண்முன்னே தெரிகின்றது.
இந்த தன்னம்பிக்கை மாத இதழ் வெற்றிப்படிகளை தொட்டவர்களைப் பாராட்டும் வகையிலும், தொட முயற்சி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், தனி மனிதருக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட வழிகாட்டியாக அமையும்.
பெட்டிச்செய்தி:
வேளாண்மையில் ஆர்வம்:
திரு.விவேகானந்தன் அவர்கள் தொழில் துறையில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் வேளாண்மையிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். வேளாண்மையின் மீதுள்ள ஆர்வத்தினால் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள நாகூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொள்ளாச்சி நெட்டை(Pollachi Tall), டிப்டூர், நௌவ்லக், டீ ஜே (Dee Jay) அந்தமான், காசர்கோடு போன்ற மிகச்சிறந்த தென்னை வகைகளைப் பயிரிட்டுள்ளார்.
இந்த மரங்கள் ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு வகையாக நடப்பட்டு இருக்கின்றன. நல்ல வீரியத்துடன் கூடிய மகசூல் கிடைக்கும் என்பதால் இவ்வாறு நடப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் இருந்தபடியே தண்ணீர் மேலாண்மை (Water Management)-யைத் திறம்படச் செய்ய புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்.
நற்குணங்களுக்குக் காரணம்
பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சேவை செய்து வருகிறார். கல்வி, மருத்துவம், வேலைவாய்பு என்று பல உதவிகளைச் செய்து வருகிறார். இத்தகைய மனப்பான்மையை தனக்கு ஏற்படுத்தியவர் சுல்தான்பேட்டை திரு. எஸ்.ஆர். இராஜகோபால் அவர்தான் என்று கூறும் இவர், சக மனிதர்களுடன் எப்படி பழகுவது? அவர்களுக்கு எப்படி மதிப்பளிப்பது? தொழிலாளர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்று எப்படி நிர்வாகத்தைத் திறம்பட கொண்டுசெல்வது? சமுதாயத்துக்கு தன்னலம் கருதாமல் பயன்களைக் கொடுப்பது என்று பல ஆளுமைகளையும், பன்முகத்தன்மைகளையும் திரு. இராஜகோபால் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டே கற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்.
தலைமைப் பொறுப்பில்…
30 ஆண்டுகளுக்கு மேலாக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்து பல ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து பள்ளியின் தரம் மேம்பட உதவிக்கொண்டிருக்கிறார்.
தான் படித்த எஸ்.ஆர்என்.வி மேல்நிலைப் பள்ளியின் முன்னால் மாணவர்கள் கூட்டமைப்பின் பொருளாளராக இருக்கிறார்.
200 உறுப்பினர்களையும், 4000 நிட்டிங் மெசின்களையும் கொண்டு இயங்கும் சவுத் இந்தியா இம்போர்ட்டடு மெசின் நிட்டர்ஸ் அசோசியேசனின் தலைவராகவும் திறம்பட செயலாற்றுகிறார்…
No comments:
Post a Comment