November 16, 2014

மனக்கண்ணாடி

தன்னம்பிக்கை, சாதனைகள் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் எண்ணம் இருக்கும். அது என்ன தெரியுமா? அதிகம் படித்தவர்கள், முதல் மதிப்பெண் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள்… என்று. அப்படி இல்லையென்று இந்த மாதிரியான ‘இமேஜ்’ஜை உடைத்துக் காண்பித்தவர்கள் நம் அருகிலேயே இருக்கலாம். சாதனை என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். இதிலே ஏற்றத்தாழ்வுக்கு இடமே இல்லை.
காலையில் எழுகின்ற நேரம் முதல் இரவு படுக்கையைத் தட்டிப் போடும் வரை நாம் எல்லோருமே ஒருவித குறிக்கோளை நோக்கி, தன்னம்பிக்கையை நோக்கி நகர்கிறோம் என்பதை உணர்வதில்லை.
நம்மை உற்சாகப்படுத்த யாரும் இல்லை. கைதட்டி அங்கீகாரம் கொடுக்க யாரும் இல்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. தோல்விகள் தான் நம்மைத் தூக்கி நிறுத்தும் ‘கிரேன்’. மீண்டும் உசுப்பேற்றி எழவைக்கும் ஒரு அபூர்வமான பொருள். ஒரு தவறிலிருந்து பாடம் கற்கிறோம். அதை ஏன் அவமானமாக நினைக்க வேண்டும். உதாரணமாக குட்டி கதையொன்றைப் பார்ப்போம்…
குள்ளமாக இருக்கும் ராம் உயரமாக இருக்கும் ராஜேஷை நெருங்கி கேட்கிறார். ‘உயரமாக ஏதாச்சும் ஐடியா கொடேன்’ என்று உரிமையாய்.
அதற்கு ராஜேஷ், “அதோ அங்கே பாருங்க… ஒரு பெரிய மரம் இருக்கு. அதுல ஒரு கிளைய தினமும் காலையில எட்டி பிடிச்சு ஊஞ்சலாடுங்க…” என்று சொல்லி சென்றார்.
ராம் அந்த மரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தார். எந்த ஒரு கிளையையும் இவரால் எட்டிப் பிடிச்சு ஊஞ்சலாட சில நிமிடங்கள்கூட தாக்கு பிடிக்க முடியாது. ஆக, இந்த ராஜேஷ் நம்மை ஏளனமாகவே எடைபோட்டு பதில் சொல்கிறார் என மனதுக்குள் வேகவேகமாக தவறாகக் கணக்குப்போட்டு கண் கலங்கினார்.
அப்படியே அந்த மரத்தின் அடியில் ஒரு கல் மேல் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தார். குள்ளமாய் பிறந்தது என் குறையா?… படைத்த இறைவனின் தவறா?… என்ற தாழ்வு மனப்பான்மையால் தத்தளித்தார்.
இப்போது குள்ளம் ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ராஜேஷ் “எட்டாத மரத்தை காட்டி எட்டிப்பிடி” ன்னு இளக்காரமா பதில் சொல்லிட்டாரேன்னு கண்களில் நீர் எட்டி பார்த்தது.
இவருக்கு எதையாவது பண்ணி ஒரு அங்குலமாவது வளர்ந்து காட்ட வேண்டும் என உத்வேகம் எழுந்தது.
தான் உட்கார்ந்த கல்லின் மேல் எழுந்து நின்று பார்த்தார். இந்த கல்லின் மேல் நின்று ‘ஹக்’ என எம்பிக்குதித்தால் ஒரு கிளையை இரு கைகளால் கொக்கி போட்டு பிடித்து முன்னும் பின்னும் சின்ன ஊஞ்சலோடு ஒரு நிமிடம் தாக்கு பிடித்து கீழே குதிப்பது என முடிவு செய்தார்.
அந்த மரத்தில் ராம் நின்று இருக்கும் உயரத்தை சாக்பீஸால் கோடு போட்டுக் குறித்துக் கொண்டார். அதிகாலையில் பாதி விடிந்ததும் விடியாத வேளையில் தினமும் ராம் அந்த மரத்தின் அருகில் உள்ள கல்லிலிருந்து ‘ஜம்ப்’ செய்தார். ஆரம்பத்தில் கை வலித்தது. கிளையை பற்றித் தொங்கும்போது உள்ளங்கைகள் எரிவதுபோல இருந்தாலும் அவர் எடுத்த முயற்சியை விடவில்லை.
குறைந்தபட்சம் ஒரு அங்குலமாவது வளர்ந்து அதை ராஜேஷிடம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி செய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் ஒன்றரை அங்குலம் வளர்ந்து முதலில் போட்ட சாக்பீஸ் கோட்டினைத் தாண்டி நின்றது.
அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. கண்ணாடி முன்பு நின்று பார்த்தார். முதல் வேலையாக ராஜேஷை சந்தித்தார். தான் வளர்ந்ததை மரத்தை சாட்சியாக வைத்து சாக்பீஸ் கோட்டினை நடுவராகக் காட்டினார்.
ஆச்சர்யப்பட்ட ராஜேஷ் முகம் மலர கை குலுக்கி ராமோடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அந்த வார்த்தை ராம் மனதில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா என வியந்தார்.
இப்போது நமக்கு ஓர் உண்மை புரிந்திருக்கும். ராமை யாரும் ‘கை தட்டி, விசில் அடித்தோ, ஆமாம் அப்படித்தான்’ என்றோ உற்சாகமூட்டவில்லை.
ஒரு வார்த்தை, அதையே பாலமாக அமைத்து வெற்றிப்படிக்கட்டை எட்டிப்பிடித்தார். தன்னம்பிக்கையை வளர்த்திக் கொள்வதும், சாதனைகளை உருவாக்குவதும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. மனப்பயிற்சி நம்மை மாமனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.
நம்முடைய மனம் கண்ணாடியாய் பிரதிபலிக்க வேண்டும். சந்தோஷமாய் சிரிக்கும்போது கண்ணாடியில் தெரியும் நம் உருவமும் சிரிக்கிறது. அழும்போது அதுவும் அழுகிறது. அதேசமயம் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கையசைத்துப் பாருங்கள். வெற்றியாளனாக வலம் வருவீர்கள்.
இல்லை என்ற சொல்லை
இல்லாமல் செய்வோம்!
முடியும் என்ற வார்த்தையை
மூளையில் மூலதனமாக்குவோம்!
அவமானங்களை
அஸ்திவாரமாக அமைப்போம்!
வேதனைகளை
வேர்வையெனத் துடைப்போம்!
சோதனைகள்
சாதனைகளாக மலரும் வரை…
மனவலிமை கொண்டு
மலையென நிற்போம்!

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...