January 20, 2010

சீரும் பேறும் தரும் பௌர்ணமி மருவூரின் சித்திரைப் பௌர்ணமி




சீரும் பேறும் தரும் பௌர்ணமி, அது மருவூரின் சித்திரைப்
பௌர்ணமி. எத்தனை பௌர்ணமிகள் வருகின்றன. 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி! பூரணமான ஒருநாள்.
 நம் கண்களுக்கு நிலா அழகாகத் தெரிகிறது. அந்த பூரண நாளில் 
பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்.சித்தவனம் 
என அழைக்கப்படும் மருவத்தூரில் 21 சித்தர்களின் ஜீவ சமாதி
 இருப்பதால் அதிகளவில் உலாவி வருகிறார்கள். அன்னை
 ஆதிபராசக்தி கூட சித்தராக உலவி மக்களிடையே நடமாடுகிறாள்.
 பலர் இதைக்கண்டு அனுபவித்திருக்கிறார்கள். சித்தர்களுடைய
 பௌர்ணமி இந்த சித்திரா பௌர்ணமி.


மருவூரில் நடைபெறும் பௌர்ணமி வேள்விப் பூஜையில் சித்தர்கள் ஆவலோடு வந்து கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வேண்டுதல்களையெல்லாம் எப்படி தீர்க்கலாம் என சிந்திக்கிறார்கள். மனிதர்களாக நடமாடி அவர்களுடைய கவலைகளைத் தீர்க்கிறார்கள். அன்னதானத்தில் பங்குபற்றி உணவருந்தி மகிழ்கிறார்கள். இந்த மகேஸ்வர பூஜையில் பங்குபற்றும் அடியார்களை வாழ்த்தி மகிழ்கிறார்கள். அருவமாக உருவமாக உலவும் சித்தர்களின் ஆசியால் வாழ்க்கையில் எம்மை வருத்தும் சாபங்கள் தீர்க்கப்படுகின்றன. சித்தர்கள் கடவுளைக் கண்டவர்கள். கடவுளாக இருப்பவர்கள். அவர்கள் உலாவும் மாதம் இந்த சித்திரை மாதம். அத்தனை சிறப்பானது இந்த சித்திரைப் பௌர்ணமி. சித்தர் மாதம் தான் சித்திரை மாதமாக மாறியதோ தெரியவில்லை. இந்த மாதத்திற்கான பௌர்ணமித் திதி சிறப்பானது. புத்தர் ஞானம் பெற்ற நாளானதால் புத்த பூர்ணிமா எனவும் அழைக்கப்படுகிறது.


அன்று


வேள்விகள் மகாராஜாக்களாலும்,மகா பிரபுக்களாலும் நடத்தப்பட்டது. 
இராஜ சூய யாகம் கூட நடத்தப்பட்டது. நாட்டு நலம் வேண்டி செய்தார்கள். அரசாட்சி நீடிக்க செய்தார்கள். தமக்கு பின் அரசாட்சி செய்ய ஒரு வாரிசு வேண்டுமே என மிகப் பெரிய யாகமெல்லாம் செய்தார்கள்.


ஆனால் இன்று


அரசர்களால்,அந்தணப் பெருமக்களால் தர்ப்பை போட்டு சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க செய்யப்படும் வேள்விகளாக அல்லாமல் 
பாமரமக்களால் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க யாகம் செய்யப்படுகிறது. 
ஒரு தாய் தன் குழந்தைக்கு காலங்களுக்கேற்ப உணவூட்டுவது போல 
உலகத் தாயாகிய அன்னை ஆதிபராசக்தி அவ்வப் போது விழாக்களை ஏற்படுத்தி எம்மை ஆன்மீக வழியில் இட்டுச் செல்கிறாள். அப்படிப்பட்ட
 ஒரு விழா தான் சித்திரை பௌர்ணமி வேள்வியாகும்.


அன்று அரசன் நடத்திய வேள்வியை இன்று மேல்மருவத்தூரில் 
அன்னை ஆதிபராசக்தி முன்னின்று நடத்துகிறாள்.


அன்னை எப்படி இந்த வேள்விகளை நடத்துகிறாள்! எமது குருவாக
 திகழும் அடிகளார் உருவில் அவற்றை கூறுகிறாள். யாக குண்டங்களின் அமைப்பை விளக்குகிறாள். ஒவ்வொரு யாக குண்டமும் இந்த அளவுப் பிரமாணமாக அமைய வேண்டும் என அளவுகளைக் கூறுகிறாள். 
அத்தனையும் அன்னையின் ஆணைப்படியே நடக்கின்றன.


சித்திரை பௌர்ணமி விழா என்றால் செவ்வாடைத் தொண்டர்களுக்குதான் எத்தனை குதூகலம். சித்தர் பீடத்தை அலங்கரிப்பதற்கு ஆவலுடன் செயற்படுவார்கள். முகப்பு அலங்காரம் பிரமாண்டமாக அமைந்திருக்கும். சித்தர் பீட வளாகம் முழுவதும் ஒரு நேர்த்தியுடன் அழகான முறையில் சதுர, சாய் சதுர, வட்ட, ஐங்கோண, அறுகோண, முக்கோண வடிவங்களில் வரிசை வரிசையாக யாக குண்டங்கள்! கருவறையின் முன்பும், புற்று மண்டபத்தின் முன்பும், ஓம் சக்தி மேடையின் முன்பும் சூல வடிவிலும், நாகங்கள், இரட்டை நாகங்கள், கண்களையும், கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.


யாக குண்டங்கள் சரியான முறையில் அமைக்கப்படவேண்டும் என்பதில் அன்னை மிகக் கவனமாக இருக்கிறாள். யாக குண்டங்களின் அமைப்பில்
 சிறு பிழை இருந்தாலும் அது மிகப் பெரிய பாதிப்பைத் தரும். ஈரத்துணியுடன் வந்து யாக குண்டங்களை செவ்வாடைத் தொண்டர் அமைக்கும் போது
 அம்மா பார்த்து பார்த்து சரி செய்கிறாள். நூல் இழையில் தவறு இருப்பினும் அது சரிசெய்யப்படுகின்றது. ஆகுதிகளை நின்று கொண்டு போடக்கூடாது என்பதற்காக இருந்து கொண்டு செய்யும் அளவு குண்டங்கள் அமைக்கப்படும் அழகுதான் என்ன?


யாக குண்டங்கள் அமைப்பதற்காக எங்கெங்கோ இருந்து கல்லும் மண்ணும் கொண்டு வந்தாலும் மருவத்தூரில் அவை புனிதமாக்கப்படுகிறது. பசுவின் சாணம் எவ்வளவு புனிதமானது என்பது உங்களுக்கு தெரியும். அன்று பசுவின் சாணத்தால் முற்றத்தை மெழுகி கோலமிடுவார்கள். ஆனால் இன்று நம் நாட்டில் சூழ்நிலைகாரணமாகவும், இயந்திர வேலை மயமாக்கப்பட்டதாலும் இது தவிர்க்கப்பட்டாலும் பசுவின் சாணத்துக்கு கிருமிகளை அகற்றும் சக்தி உண்டென்பது எல்லோரும் அறிந்தது. அந்த பசுவின் சாணம் மூலம் யாக குண்டங்கள் மெழுகப்பட்டு சுத்தமாக்கப்படுகின்றன. ஆலய வளாகம் எங்கும் சாணத்தின் வாசம் கமகமக்கும். குஜராத் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய். வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் அந்த பெண் பசுவின்
 சாணத்தை எடுத்து கரைத்து குடித்தாளாம். கிருமிகள் அழிக்கப்பட்டு அப்பெண் உயிர் வாழ்வதாக சொல்கிறார்கள். அத்தகைய கிருமிகளைக் கூட அழிக்கும் பசுவின் சாணத்தால் யாக குண்டங்கள் மெழுகப்பட்டு சுத்தமாக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது மருவூரில் மட்டுமே.


இந்த வேள்வி பூஜைகள் மூலம் எமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்!அன்னையின் வழிகாட்டுதலில் நம் வினைகள் தணிய யாக குண்டங்களில் அமர்ந்து யாகம் செய்வதும், கலச விளக்குகளுக்கு அர்ச்சனை செய்வதும் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று வழிபடுவதும் அம்மா அருளியவை.


சித்திரைப் பௌர்ணமியில் மருவூர் மண்ணில் நாம் இருப்பது பெரிய 
பாக்கியம். மருவூர் யாகத்தில் பங்குபற்றவும் யாக சாலைகளை பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆலயம் முழுவதும் யாக குண்டங்கள். அர்ச்சகர்கள் இல்லை. சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. ஆனால் பக்தியுடன் செய்யப்படுகிறது. சித்தர் பீடத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஒலி அலைகளில் ஊடுருவி வரும் மந்திர ஒலிகள் காதில் விழுகின்றன. காற்றில் தவழ்ந்து வரும் புகை நாசி வழியாக உள்ளே போகிறது. அதன் அருட்பயன்களை நாம் பெற வேண்டாமா?


எமது மனம் ஒரு குறிக்கோளுடன் இருந்தால் வேறெந்த கோள்களும் 
கிட்ட நெருங்காது. மருவூர் யாக குண்டங்களுக்கு சர்வ வல்லமையுண்டு. வேள்விகளில் கூறப்படும் சங்கற்பங்கள் அனைத்தும் அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குடும்ப நலன் வேண்டி, கல்வி சிறக்க, 
திருமணம் நடக்க, பிள்ளை வரம் வேண்டி, தொழில் வாய்ப்பு பெற உங்கள் தேவைகள் எதுவோ அத்தனையையும் அந்த வேள்விக்குண்டத்தின் முன்பு கலச விளக்குகளுக்கு முன்பு இருந்து சொல்லிப்பாருங்கள். சங்கற்பங்கள் சத்தியமாக்கப்படுகின்றன. அனைத்தும் சீராக்கப்படுகின்றது. மனதுக்கு 
அமைதி தரும் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தவுடன் மனமெல்லாம் பக்தி பரவசமாகிவிடும். அம்மா உணர்த்த உணர்த்த எழுதப்பட்ட தமிழ் மந்திரங்கள் அல்லவா? அம்மாவின் அருள் நிலையில் எழுதப்பட்ட அற்புத மந்திரங்கள். இந்த மந்திரங்களின் இரு பக்கங்களிலும் "ஓம்' ஒலிக்கிறது. "ஓம்' மந்திரங்களின் காப்பு. எல்லா மந்திரங்களிலும் ஓம் வடிவத்தில் இருக்கும் அன்னை ஒலி வடிவில் கவசமாக ஒலிக்கிறாள்.


கலச சக்கரங்களில் இருப்பதே மந்திரங்களில் வருகிறது. மந்திரங்களின்
 சக்தி எம்முள் இருந்து வெளிப்பட்டு நாம் அளிக்கும் ""அவிஸ்' எனப்படும் ஆகுதி மூலம் அன்னையிடம் கையளிக்கப்படுகிறது. பஞ்சபூதங்களில்
 நெருப்பு ஒன்றுதான் மேலெழுகிறது. எனவே யாக குண்டங்களில் நாம்
 இடும் ஒவ்வொரு பொருளையும் அக்னி தேவர்களிடம் கொண்டு சென்று சமர்ப்பிக்க தேவர்கள் அதை ஆவலுடன் பெற்று அன்னையிடம் கையளிக்கிறார்கள், எம் தேவைகள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.


பெண் உண்மையானவள், திண்மையானவள், நேர்மையானவள், சோர்வில்லாதவள், பொறுமையானவள். அதனால்தான் ஆலயத்தொண்டுகளை பெண்களே செய்யப் பணித்தாள். வேறெந்த ஆலயங்களிலும் இல்லாத ஒன்று மருவத்தூரில் மட்டுமே நாம் காணலாம். அதுதான் பெண்ணுக்கு உரிமை கொடுத்தார்கள். கலசத்தில் நூல் சுற்றுவது முதல் கும்பாபிஷேகம் செய்வது வரை பெண்கள் செய்யும் தொண்டுகளை வேறெங்கே காண்பீர்கள்?


குத்துவிளக்கின் முன் குடும்ப விளக்குகள் அமர்ந்து கலச விளக்கு பூஜை செய்வதும், வேப்பிலையால் விளக்கு பூஜை செய்வதும் மருவத்தூரில் தான்! இத்தகைய அற்புதமான வேள்வி விரும்பியதை தரும். தெய்வமும் விரும்பித் தரும். இரண்டும் இறையருளால் கிடைக்கிறது.


83ஆம் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லை, மக்கள் தண்ணீருக்காக அலைந்தனர். அப்போது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கின் படி தேனாம்பேட்டையில் மே 13 ஆம் திகதி வேள்விப் பூஜை நடைபெற்றது. வேள்வி பகல் நடந்தது. இரவு மழை பொழிந்து தண்ணீர் தாகத்தை தீர்த்தது.


1984ஆம் ஆண்டு மே 12,13ஆம் திகதியில் மதுரையில் வேள்வி
 நடைபெற்றது. கண்ணகியின் சாபம் காரணமாக கந்தக பூமியாக மாறிவிட்ட மதுரையை சாந்த பூமியாக மாற்றவும் மகளிர் மேம்பாட்டுக்காகவும் வேள்வி நடத்துமாறு அன்னை ஆணையிட்டபடிவேள்வி நடைபெற்றது. அந்த வேள்வியில் அன்னை ஆதிபராசக்தி வெள்ளை ஆடை அணிந்த பெண்ணாக வந்து அடிகளார் கைகளால் பால் வாங்கி கொடுத்த காட்சி பல கண்களுக்கு தெரிந்தது ஒரு அற்புதம்.


83ஆம் ஆண்டு ஆலயத்தில் மே மாதம் நடந்த வேள்வியில் தலவிருட்சம் அருகே ஒரு முக்கோண யாக குண்டம் அமைத்திருந்தார்கள். அன்னை வேப்பிலையோடு சுற்றி வந்தாள். யாக குண்டங்கள் சரியாக அமைந்திருக்கிறதா என கவனித்தாள். இந்த யாக குண்டம் அருகே
 வந்து நின்று விட்டாள். சிறு பிழை அங்கே தெரிந்தது. அதை உடைத்தும்
 செய்ய முடியாது. உடனே அன்னை வேப்பிலையை கிள்ளி அக் குண்டத்தில் போட அது பூவாக மாறி விழுந்து அந்த தவறை சரி செய்து விட்டது.


99ஆ ம் ஆண்டு உலக சமூக நேய மகா வேள்வி நடத்தப்பட்டது. 
அன்னையிடம் 15 கோரிக்கைகள் சங்கற்பமாக வைத்து 1200 யாக 
குண்டங்கள் அமைத்து யாகம் செய்யப்பட்டது.


இம் முறை இன்று வெள்ளிக் கிழமை சித்திரை பௌர்ணமி அன்று 
மாபெரும் கலச விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. வெள்ளியன்று நடைபெறும் இந்த வேள்வியின் முக்கிய விசேட யாக குண்டம் திரிசூல அமைப்பைக் கொண்டது. எமது இலங்கை நாட்டின் சமாதானத்துக்காக இலங்கைச் சக்திகளை திரிசூல யாக குண்டத்தை எடுத்துச் செய்யும் படி பணித்துள்ளாள் அன்னை ஆதிபராசக்தி!

அது மட்டுமா?

எமது நாட்டில் சாந்தி சமாதானம் நிலவும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இலங்கை வாழ் மக்கள் சகோதர உணர்வோடு சாதி, மத, மொழி வேறுபாடின்றி அன்புடன் ஒற்றுமையுடன் வாழ இந்த வேள்வி வழிசமைக்கும்!


அழகாபுரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இலங்கைத் திருநாட்டை அன்னை ஆதிபராசக்தி தன் கரங்களில் மீண்டும் ஏற்றுக் கொள்ளும் அற்புதத் திருநாள் விரைவில் வர இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி!

ஆம்! அன்னை ஆதிபராசக்தி அடிகளார் மூலமாக அருள் வாக்கில் கூறியிருக்கும் ஒரு இனிய செய்தி என்ன தெரியுமா? இலங்கையின் தலைநகரில் சக்தி பீடம் அமையப் போகிறது. அன்னை ஆதிபராசக்தியே முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தி அந்த பீடத்தில் வந்து அமர உள்ளாள். அடிகளார்
மூலம் அருள்வாக்கில் கூறிய இந்த அற்புத நிகழ்வு என்று நடக்கும்?

சக்தி பீடம் விரைவில் அமையத்தான் போகிறது. அன்னையின் பாதம் இலங்கை மண்ணில் பதிந்து எமது நாடு புனிதமடையத்தான் போகிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழத்தான் போகிறார்கள்! எமது நாடு மீண்டும் வளம் கொழிக்கும் நாடாக மாறத்தான் போகிறது. இது அம்மாவின் அருள் வாக்கு. திரிசூல யாகம் அதற்கு வழி சமைக்கும் என்பது செவ்வாடைத் தொண்டர்களின் நம்பிக்கை!

அன்னையின் பாதம் படும் நாள் விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எம் பெருமாட்டியை மனதார தொழுவோமாக!

1 comment:

கௌரி விமலேந்திரன் said...

வணக்கம்.
இந்த கட்டுரை என்னால் எழுதப்பட்டது. தினக்குரலில் வெளிவந்தது.
என்னுடையை http://bakthipookkal.blogspot.com/2009/12/blog-post_17.html
பதிவு செய்தேன்.
என்னுடைய பெயர் போடாமல் கட்டுரை போட்டுள்ளீர்கள்.
எழுதியவர் பெயரைப் போட்டுவிடுங்கள்.
தற்போது இருவர் இதை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
நன்றி.
கௌரி விமலேந்திரன்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...