February 18, 2012

அழகு குறிப்பு – முகத்திற்கு பொலிவு தரும் கன்னங்களுக்கு . . .

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னங்கள் கொ ஞ்சம் புஷ்டியாக இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோ ற்றத்தையே கெடுத்து விடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உண வு முறை அவசியம் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் அறிவு ரையாகும்.

பள பளக்கும் பட்டுக் கன்னம்

தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தோடு கன்னங்கள் புஷ்டிக்கும் அவசியமாகிறது. கா லையில் எழுந்து சிறிதளவு வெண் ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற் கு பேசியல் போட கன்னம் பள பள ப்பாக மாறுவதோடு குண்டாகும். மித மான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவை த் திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.
சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச் சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்க ளை பிடித்து கிள்ளத் தூண்டும். கற் றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவ தோடு பளபளப்பைம் தரும்.

ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும். அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.

மஞ்சள் அதிகம் போடுவதை சற்று குறைத்துக் கொள்ளவது கன்னத் தின் அழகை வறட்சியாக்குவதை தடுக்கும்.

ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப் பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

சத்தான உணவு, உறக்கம்

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண் ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரை கள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது
நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங் கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக் கும்.
AD

February 13, 2011

முயற்சி தரும் வெற்றி


தெளிவு, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையிலே ஏற்படும் ஓர் உந்துசக்தியே செயலாகப் பயன்படும். இந்த நிலை ஏற்படுவதற்கு மனதிற்குத் தெளிவைக் கொடுக்க வேண்டும்.அறிவை கூர்மைப்படுத்தி உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும். முயற்சிக்கு இம்மூன்றும் உறுதுணையாக இருக்கும். முயற்சி தான் நம்மை முழுமனிதனாக ஆக்கும்.
வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. அறிவை வளரச் செய்வதிலும் துடிப்புடன் நின்றால்தான் நிமிர்ந்து நின்று வளம் பெற முடியும்.‘கிரேக்க சமுதாயத்தின் ஏற்றம் மிகுந்த இளைஞர்களே, வருங்கால கனவான்களே, நீங்கள் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது; அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவு இப்பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைப் பெறுவதற்குத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறேன்’ இந்தக் குரல் வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.
சிந்தித்துச் சிந்தித்துச் தெளிவடைந்த சீர்திருத்தச் செம்மல், ஏதன்ஸ் நகரமாந்தர் அனைவர் உள்ளங்களிலும் உற்சாகத்தையும், ஏதென்ஸ் நகர வீதிகளில் கலகலப்பையும் உண்டாக்கிய சிம்மக்குரலோன் சாக்ரடிஸிடமிருந்துதான் வெளிவந்தது.
அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அடி வானத்திற்கு அப்பாலிருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்ற வினா எழுவது இயல்பு. இதற்கு விடை காண்பது முக்கியம்.
முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே, முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது, வாழ்க்கையிலும் எதுவும் இல்லாமல் போய் விடுகிறது. அப்பொழுது முயற்சிக்கே இடமில்லை.முயற்சி சமுதாய மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. சமுதாயத்தைச் சீர்படுத்துவதே முயற்சிதான். முயற்சி முதலில் அறியாமையை விரட்டுகிறது.
அறியாமை விரட்டப்பட்டால் புது எழுச்சி தோன்றுகிறது. முயற்சி நம்முடைய கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும் கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
விரிவாகப் பார்க்கும்போது முயற்சி நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு மாபெரும் கருவியாக இருந்துவருகிறது.
வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
வாழ்வின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும், உணர்வதற்கும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பது முயற்சிதான்.
முயற்சி செய்தால்தான் வாழ்வதன் மகத்துவம் தெரியும். வாழ்க்கையில் எப்போது நாம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோமோ -
எப்பொழுது உலகில் நாம் முயன்று சாதிப்பதற்கு ஒன்றுமில்லை எண்ணுகிறோமோ அப்பொழுதுதே நம்முடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும்.
எந்த நாடு முன்னேற்றத்தின் விளிம்பை தொட்டுவிட்டோம் என்று இறுமாந்தி நிற்கிறதோ, அதனுடைய அர்த்தம் அந்த நாடு அழிவை நோக்கிச் செல்லும் வழியாக இறங்க ஆரம்பித்துவிட்டது என்பதாகும்.
எந்த நாடு எனக்கு எதிரிகளே இல்லை எனவும், தன்னை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை என்னும் முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ அது அடிமையாகும் நாட்களை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
இதனுடைய விரிவான விளக்கம் என்னவென்றால் -வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்ய வேண்டும் என்னும் தனிமனித தத்துவத்தை ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து விரிவான கோணத்தில் பார்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சி எந்த விதத்திலும் எல்லையைத் தொட்டுவிடக்கூடாது. முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையே இல்லை.
இது மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது ஏன் என்றால் -
முன்னேற்றம் ஏற்படாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த தேக்க நிலையில் ஏற்படும் இழப்பு இரட்டிப்புச் சரிவை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக ரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் கூற முடியும். ரோமானியர்கள், உலகமே ரோம் நகரம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று எண்ணினார்கள். உலக நாகரிகத்தின் எல்லையே ரோம் தான் என்று கருதினார்கள்.
அதன்பயனாக அவர்கள் உண்பதிலும் உல்லாசம் அனுபவிப்பதிலும் உறங்குவதிலும் தீவிரம் காட்டிய அளவு -உழைப்பதில் காட்டவில்லை. இதன் காரணமாக ரோமப் பேரரசும் அதன் நாகரிகமும் காலப்போக்கில் முகவரி தெரியமலே போய்விட்டது.
நாம் மேற்கொள்ளும் முயற்சி வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும். நமது அதிகபட்சத் திறமையினால் முயற்சியின் பலன் விரைவிலே கிடைத்து விட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.

வெற்றி நிச்சயம்


உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் தான் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் அடைய இயலாது.
ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை”“இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டு அவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”
புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்த வேலையைத் தொடங்கினார். அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.
“நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்.
“கேட்டவற்றைச் சொல்”
பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.
இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர் “இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.
“விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”
புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்
நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமாகச் சில விஷயங்களை நம் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். அவ்வாறு அகற்ற வேண்டிய விஷயங்களில் முதன்மையானது எதிர்மறை சிந்தனை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் நமது மனம் எதைப்பற்றி சிந்திக்கிறதோ அந்தச் சிந்தனையே வெற்றி பெறும். ஒரு இளைஞன் காலியாக உள்ள ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவன் விண்ணப்பிக்கும் போதே சில எதிர்மறையான விஷயங்களைத் தனக்கு முன்னால் வைக்கிறான். பத்தே இடங்கள் தான் காலியாக உள்ளன. பல ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். நமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது. பலர் சிபாரிசுகளோடு வருவார்கள். கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னாலும் சிபாரிசோடு வருபவர்களையே வேலைக்குத் தேர்வு செய்வார்கள். எதிலும் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. இந்த இன்டர்வியூ வெறும் கண்துடைப்புதான். இப்படி பல எதிர்மறையான விஷயங்களையே அந்த இளைஞனின் மனசு யோசிக்கிறது. அவன் சிந்தித்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உண்மையாகிப் போகிறது. இதனால் வேலையும் கிடைக்காமல் போகிறது.
ஒரு விஷயத்தில் இறங்குகிறாம் என்றால் முதலில் நாம் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான விஷயங்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக இருந்தாலும் அந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும். இன்டர்வியூவில் நான் நன்றாக பதில் சொல்லுவேன். இந்த வேலைக்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்று ஒருவன் சிந்திப்பானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். ஆகவே நாம் எப்போதும் வெற்றி கிடைக்குமோ இல்லையோ அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேர்மறையாக சிந்திக்கப்பழகிக் கொள்ள வேண்டும். இது நம் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிக்கும். வெற்றிக்கும் வழி வகுக்கும்.
நாம் அகற்ற வேண்டிய அடுத்த விஷயம் தாழ்வு மனப்பான்மை. ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள்.
இனிநாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சற்றுப்பார்போம்.
காலையில் எழுந்ததும் உங்கள் மனதுக்குள்ளே ஒரு சபதத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் நிச்சயம் எனக்கு நல்லதாக இருக்கும். இன்று நான் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுவேன். நேற்றைய நாளைவிட இன்று அறிவிலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திலோ நான் முன்னேறியவனாக இருப்பேன். இப்படி சபதம் எடுத்துவிட்டு உங்களுடைய நாளைத் துவக்கிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் மனத்தில் புத்துணர்ச்சி உருவாகும். இது உங்கள் சாதனைக்கு வழிவகுக்கும்.
அடுத்ததாக எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமின்றி செய்தால் அதில் வெற்றி பெற இயலாது. ஒரு மனிதன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணி எத்தகைய கடினமானதாக இருந்தாலும் அதை மிகச் சுலபமாக முடிக்கலாம். எதையும் வெறுப்போடு நோக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே வெல்வதற்கே என்று அடிக்கடி உங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பது முதுமொழி. இது உண்மை தான். உடல் நன்றாக இருந்தால் தான் நாம் சாதனைகளைச் சுலபமாகச் செய்ய முடியும் தேர்வுகளுக்காக வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படித்துக் கடைசியில் தேர்வு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் ஒரு மாணவனுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைச் சற்று மனதில் சிந்தித்துப் பாருங்கள். தேர்விற்காக மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நம்மால் சிறந்த முறையில் வாழ முடியும். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்கள் நிச்சயம் உடலுக்கு கேட்டை மட்டுமே விளைவிக்கும். இயற்கையாக விளையும் பழங்கள், பழச்சாறுகள், இளநீர், வீட்டில் செய்யும் உணவு வகைகள் போன்றவற்றை நிறைய சாப்பிடுங்கள். இதனால் எந்த கெடுதலும் விளையாது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் ஆழ்ந்த தூக்கம்.
நமது மூளையில் ஹிப்போகேம்பஸ் என்றொரு முக்கிய பகுதி இருக்கிறது. நமது நினைவாற்றலுக்கு இந்த பகுதியே முக்கிய பங்கு வகுக்கிறது. இரவு நேரங்களில் போதிய அளவிற்கு தூங்காவிட்டால் அது நமது நினைவுத்திறனை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நம்மால் நினைத்த மாத்திரத்தில் மிகச்சுலபமாக தூங்க முடியும். அதற்கென பிரத்யோகமாக சில பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுதுமே வலது பக்கமாக திரும்பிப்படுக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நமது நுரையீரல் இரண்டு பகுதிகளால் ஆனது. இதில் இடதுபக்க நுரையீரலைவிட வலதுபக்க நுரையீரல் அளவில் சற்று பெரியதாகும். நீங்கள் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கும்போது உங்கள் உடலுக்கு அதிக அளவில் பிராண சக்தி கிடைக்கும். இது சிறந்த தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்குத் தரும்.
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார்கள். விரைவில் களைத்துப் போவார்கள். மெல்ல மெல்ல செயலில் ஆர்வம் குன்றத் தொடங்கும். பின்னர் மனதில் சலிப்பு வந்து அமர்ந்து கொள்ளும். ஆகவே தினந்தோறும் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறுமணி நேரமாவது ஆழ்ந்து தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளும் வெற்றி தானாக நம்மைத் தேடிவராது. நாம்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நிச்சயமாகப் பின்பற்றியாக வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களைப் படியுங்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அவர்களின் வாழ்க்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அவர்களைப் போல வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

November 17, 2010

எண்ணப் படம்

விசித்திரமானது மனித மனம், மனம் பற்றி அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருவே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு மனித மனத்தில் தோன்று எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.

மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல எண்ணங்கள், மற்றது கெட்ட எண்ணங்கள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை எண்ணங்கள் உண்டு அவை தேவையற்ற எண்ணங்கள் என்ற வகையில் வரும்.

எண்ணங்கள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான், தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது நடப்பது போன்றது தான் மனதில் தோன்றும் எண்ணங்கள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது ஓடிக் கொண்டே இருக்கும், குழந்தைகளுக்கு பேச்சுவரும் வரை எண்ணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் எண்ணங்கள் ஏற்பட்டு அறிவு வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் எண்ணங்கள் பிறகு அதனுடன் ஒப்பீட்டிற்காக தோன்று எண்ணங்கள் சேர்ந்துவிடும்.

தன்னால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் தான் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற THAT IS POSSITIVE / NEGATIVE OR BAD / WASTE THOUGHTS) எண்ணங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே நமக்கு வந்து செல்லும் எண்ணங்கள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் மன ஓட்டத்தை மட்டுமே கவனியுங்கள் உங்கள் சிந்தனைகள் எங்கெல்லாம் சென்றுவருகிறது என்பதைப் பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய எண்ணங்களில் 90 விழுக்காடு தேவையற்ற எண்ணங்களாகவே இருக்கும்.

உடல் சார்ந்த அயற்சியைவிட மனம் சார்ந்த அயற்சியே சோர்வை மிகுதியாக தரும். இந்த மனச்சோர்வின் மூல காரணிகளே எண்ணங்கள் தான். நல்ல எண்ணங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், கெட்ட எண்ணங்களும் தேவையற்ற எண்ணங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும். நம் எண்ணங்களில் 10 விழுக்காடு கெட்ட எண்ணங்கள், 80 விழுக்காடு வீனான எண்ணங்கள் என 90 விழுக்காடு இருக்கிறது. மூளையில் இருந்துதான் எண்ணங்களுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற எண்ணங்களினால் மூளையின் சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது, உடல் நலம் மனநலத்துடல் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வையும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.

November 6, 2010

கந்த சஷ்டி கவசம்














காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

October 8, 2010

"யோக வாழ்க்கை" என்ற நூலில் மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

விலங்கு உடலாலும், உணர்வாலும் வாழ்கிறது. மனிதனுக்கு மனம் உண்டு. ஆனால் அவன் வாழ்வில் மனம் பெரும்பங்கு கொள்ளவில்லை. விலங்குக்குச் சிந்தனையில்லை, மனிதனுக்குச் சிந்தனையுண்டு, சிந்திக்கும் திறனிருந்தாலும், ஆசை எழும் நேரத்திலும், அவசியம் உள்ளபொழுதும், மனிதன் சிந்தனையை விலக்கி உணர்வின்படி நடக்கின்றான். சொத்து, சம்பந்தம் போன்ற விஷயங்களில் மனிதன் உணர்வைப் புறக்கணித்து, தேவைப்படி, உடலையொட்டி முடிவு செய்கிறான். மனம் உடையவன் என்பதாலேயே அவனுக்கு மனிதன் எனப் பெயர். அவனுடைய ஜீவனில் முக்கிய கரணமாக மனத்தைக் கூறினாலும், முக்கியக் கரணம் மனமில்லை. அது ஆன்மாவாகும். இன்றுவரை ஆன்மாவே மனிதனுக்கு முக்கிய கரணமாக உள்ளது. இருந்தாலும் இதுவே முடிவன்று. வருங்காலத்தில் சத்திய ஜீவியம் முக்கியக் கரணமாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.


விஞ்ஞானம் உடலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அதிகம். அவர்கள் கண்டு கொண்டதும் ஏராளம். உணர்வைப் பற்றிப் பண்டைய நாகரீகங்கள் ஏராளமாகத் தெரிந்திருந்தனர். கல்வி பரவும்பொழுது அந்தப் புலன்கள் மறைய ஆரம்பித்தன. 12 புலன்கள் 5 ஆக மாறின. புலன் என்பது உணர்வு. உளநூல் புலன்களை ஆராய்கிறது. முடிவாகச் சொல்லக் கூடியவை குறைவு. மனம் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால் மனம் எப்படி உற்பத்தியாகிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என்று அறிஞர்கட்கு இன்றும் தோன்றவில்லை. அந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் உரிமை ஆன்மீகத்திற்கேயுண்டு. உலகெங்கும்,

ஆன்மீகப் பெருமக்கள் மனத்தைப் பற்றி ஏராளமாக அறிவார்கள்.
ஆனால் மனத்தின் ஆதி, அவசியம், அமைப்பு பற்றி இதுவரை இந்திய ரிஷிகளோ, மேல்நாட்டு விஞ்ஞானிகளோ, தத்துவ ஞானிகளோ சிந்தித்ததாகத் தெரியவில்லை.
ஸ்ரீ அரவிந்தம் மனம் எப்படி ஏற்பட்டது, எங்ஙனம் செயல்படுகிறது எனக் கூறுகிறது.
ஆன்மா, மனம், உணர்வு, ஜடம் ஆகியவற்றைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை Life Divine மூலம் கூறுகின்றது.
அடுத்த கட்டத்திற்கும் ஸ்ரீ அரவிந்தம் போகிறது. சிருஷ்டியை அதேபோல் ஆராய்கிறது.

மனம் உற்பத்தியான தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறி அதன் அம்சங்களை விளக்கமாகக் கருதுவோம். மனத்தின் ஆதி சத்தியஜீவியம். இது இரு பிரிவுகளாக மாறும்பொழுது இடைப்பட்ட நிலையில் மனம் உற்பத்தியாகிறது. இடைப்பட்ட நிலையில் இருப்பதால் அதனால் ஒரு பக்கம்தான் பார்வையுண்டு. ஆனால் திரும்பி அடுத்த பக்கத்தைப் பார்க்க முடியும். சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது மனம் ஏற்பட்டது. மனத்தின் கடமை பொருள்களைத் துண்டாடுவதாகும். இதுவே அதன் தத்துவம். மனத்திலிருந்து உணர்வும் வாழ்வு உடலும் (ஜடமும்) ஏற்பட்டது என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் இங்குக் கூறுகிறார். மனத்திற்கு ஞானம், உறுதி (knowledge, will) என இரு பகுதிகளுண்டு. ஞானத்திற்கு உறுதியில்லை, உறுதிக்கு ஞானமில்லை. இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஞானம் உறுதியுடன் கலந்தால் ஓரளவு தன்னை இழந்துவிடுகிறது. உறுதி ஞானத்தை ஏற்றால் சக்தி பிறக்கிறது. இந்த சக்தியே உணர்வு, வாழ்வு என நாம் அறிவதாகும். ஜடம் ஏற்பட்ட விதம் மேலும் தத்துவமானது என்பதால் மனம் செயல்படும் வழிகளைக் கருதுவோம். மனத்தின் முக்கியக் குணங்கள், தன்மைகள், அம்சங்கள், திறன்களாவன,

ஒன்று பலவானால் சிருஷ்டியுண்டு. ஒன்றைப் பலவாக மாற்ற ஏற்பட்ட கருவி மனம்.
மனம் சத்திய ஜீவியத்தின் துணைக் கருவி.
இதன் கடமை பொருள்களைத் துண்டிப்பது.
சத்திய ஜீவியம் தன் ஆதி என்பதை நினைவு கூறும்வரை மனத்திற்கு அறியாமையில்லை.
ஆதியை மறந்தால் மனத்திற்கு அறியாமை எழும்.
சிருஷ்டி சத் என்பதில் ஆரம்பித்து சித், ஆனந்தம், சத்திய ஜீவியம்வரை வந்து மனத்துடன் முடிகிறது.
சிருஷ்டியின் கடைசி கட்டம் மனம், ஜடமன்று.
வாழ்வும், ஜடமும் மனத்தின் மற்ற உருவங்கள்.
வாழ்வில் மனம் ஓரளவு மறைந்துள்ளது.
முழுவதும் மனம் வாழ்வில் மறைந்தால் வாழ்வு ஜடமாகும்.
மனத்தின் கருவி சிந்தனை.
சிந்தனையின் முடிவு அறிவு.
சிந்தனைக்கு அடிப்படை ஜடமான எண்ணம், உயர்வு சூட்சும எண்ணம்.
சிந்தனைக்குக் கருவி எண்ணம்.
எண்ணத்திற்கு 3 பகுதிகளுண்டு ஜடம், சூட்சுமம், காரணம்.
எண்ணம் முழுவதும் சூட்சுமமானால், அது அழியாது.
எண்ணம் மூன்றாம் நிலையான காரணத்தை எட்டினால் மனம் மேதையாகும்.

மூளையில் நிலவும் சொல்லான எண்ணம் ஜடம்.
மூளையினுள் நுழையுமுன் எண்ணம் சூட்சுமமானது.
நினைவு, சிந்தனை, அறிவு, கற்பனை, முடிவு, பாகுபாடு, ஆராய்ச்சி போன்றவை மனத்தின் திறன்கள்.
ஜடமும் வாழ்வும் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை. நடைமுறையில் மனம் வாழ்வாலும், ஜடத்தாலும் ஆளப்படுகிறது. தானே அதிபதி என மனம் உணர்ந்தால் மனத்திற்கு விடுதலையுண்டு. இன்று ஜடம் மனத்தை ஆள்கிறது. மனம் தானே அதிபதி என அறிந்தால் மனம் ஜடத்தை ஆளும். உடலுக்குப் பசித்தால், உணவு கேட்கிறது. இன்று பசிக்கும் பொழுது நாம் உடலைச் சும்மாயிரு எனக் கூற முடியாது. இதை ஜடமான உடலுக்கு மனம் கட்டுப்பட்டதாகக் கூறுகிறார்கள். மனம் தானே அதிபதி என்று கண்டுகொண்டால், உடலை, உனக்குப் பசி தேவையில்லை என்று கூறினால் வயிறு பசிக்காது. அதுவே மனம் ஜடத்தை ஆள்வதாகும். மனத்திற்கு மேலே ஆன்மாவுண்டு. ஜடம் உடலுக்குக் கீழேயுள்ளது. Life Divineஇல் 1039ஆம் பக்கத்தில்,

புறம் அகமானால், ஆன்மா ஜடத்தை ஆளும் என்கிறார் பகவான்.
அது முடிவான சித்தி. அதன் முதல் நிலைகள் நமக்குப் பயன்படும். 'கூ' என வைத்தியமுறையுண்டு. வியாதி வந்தால் அம்முறைப்படி, எனக்கு வியாதியில்லை என மந்திரமாக இடைவிடாமல் கூற வேண்டும். வியாதி குறைந்து மறையும். உடல் தனக்கு வியாதி வந்ததாக நினைக்கிறது. உடல் நினைப்பதை மனம் ஏற்கிறது. மனம் ஏற்பதால் வியாதிக்கு உயிர் வருகிறது. இதுவே 'கூ' முறையின் தத்துவம். மனம் தனக்கு வியாதியில்லை என்பதைச் சொல்வதால், மனம் வியாதியை நம்பாதே என உடலுக்குக் கூறுகிறது. உடல், மனம் கூறுவதை ஏற்றால் வியாதி குணமாகிறது.


மனம் விலகினால், வியாதி விலகும்.
சச்சிதானந்த சத், ஜடமாகவும்; சித், வாழ்வாகவும்; ஆனந்தம் சைத்தியப் புருஷனாகவும்; சத்திய ஜீவியம் மனமாகவும் மாறுகிறது என்பது தத்துவம்.

பரிணாமத்தால் பாதை மாறுகிறது.

சிருஷ்டி : பிரம்மம் → சத் → சித் → ஆனந்தம் → சத்தியஜீவியம் → மனம் → வாழ்வு → ஜடம்

பரிணாமம் : ஜடம் → வாழ்வு → மனம் → சத்தியஜீவியம் → ஆனந்தம் → சித் → சத் → பிரம்மம்

சிருஷ்டியில் பிரம்மம் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது. பரிணாமத்தில் ஜடம் பல நிலைகளைக் கடந்து பிரம்மமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை என்பதால் எல்லாமே பிரம்மம்.

ஜடம் மனமாகி, சத்தாகி, பிரம்மமாகிறது. அதுவே ஜடப்பிரம்மம்.
மனம் பிரிக்கும் கருவி. அதனால் சத்திய ஜீவியம் தரும் நிறைவை மனம் குறையாகக் காண்கிறது. தகப்பன் மகனுக்கு 1 கோடி ரூபாயை நிலம், வீடு, மனை, நகை, பணம் என அளித்தால், மகனின் மனம் வெளியூர் போகும் பொழுது கையிலுள்ள 2000 ரூபாயைக் கண்டு, அதை மட்டுமே தகப்பனார் கொடுத்ததாக நினைத்து 1 கோடி ரூபாயை, ரூ. 2000மாகக் காண்கிறது. மனம் எதிரிலுள்ளதை மட்டும் காணும் என்பதால்,

நிறைவைக் குறையாக நினைப்பது மனம் என பகவான் கூறுகிறார்.
குறையில் ஆன்மீக நிறைவைக் காண்பது சத்திய ஜீவியம்.

கையில் ரூ. 2000/- வந்தபொழுது அது தனக்குக் கிடைத்த 1 கோடியை நினைவுபடுத்தினால் அது மனம் செயல்படுவதில்லை. நம்முள் உள்ள சத்தியஜீவியம் செயல்படுவதாகும். அதனால் ரூ. 2000/- த்தில் 1 கோடியைக் காண முடியும்.

பணம் தேவை. பணமில்லாமல் வாழ்வில்லை. தேவை என்பது வேறு, ஆசை என்பது வேறு. பணத்திற்கு ஒரு குணம் உண்டு. தான் யாரிடம் உள்ளதோ, அவரைத் தனக்கு அடிமையாக்கும் திறன் பணத்திற்குண்டு. சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். பணத்தையும் துறந்தவன். பணம் வேறு, பணத்திற்குள்ள மரியாதை வேறு. பணத்தைத் துறந்த சன்னியாசி பணத்தின் மீதுள்ள மரியாதையைத் துறந்துவிட்டான் என்று கூறமுடியுமா? அன்னையிடம் வந்தவர்களில் பலர் தங்கள் சொத்து முழுவதையும் அன்னைக்குக் கொடுத்தனர். முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்திற்குப் பணத்தின் மீது மரியாதை, பற்று இருப்பதுண்டு.

முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு. I-94 (யோக வாழ்க்கை)
அற்புதம், அதிசயம், ஆச்சரியம் என்பவை பல்வேறு வகைப்பட்டவை. சரணாகதி என்பதற்கு இரு குணங்கள் உண்டு. நதி கடல் சங்கமமாவதை பகவான் உதாரணமாகக் காட்டுகிறார். சிறிய நதி, பெரிய கடல் சங்கமமாகி கடலின் பெரிய பரப்பில் கலந்து மறைகிறது. அடுத்த குணம் மனம் சரணாகதியை நாடினால் மனத்திற்கு அடுத்த கரணமான ஆன்மா வெளிவரும். மனத்திற்கு முந்தைய உணர்வும், உடலும் மனம் தேடும் சரணாகதியை ஏற்று அதன் பலனைத் தாங்களும் பெறுவார்கள். அதனால் ஆன்மா மலரும். அது அற்புதமாகும்.

அற்புதம் என்பது சரணாகதியில் சந்திக்கும் மனமும் ஆன்மாவுமாகும். I-128

மனம் என்பதன் இருப்பிடம் மூளை. அதன் கருவிகள் புலன்கள். புலன்கள் உணர்வுகளை மனத்திற்குத் தெரியப்படுத்துகின்றன. மனம் மூளை என்ற உடலுறுப்பிலிருந்து ஐம்புலன்களின் வழியாகச் செயல்படும் கரணமாகும். மனத்தின் தலையாய செயல் சிந்தனை. சிந்தனையின் முடிவும், தெளிவும் அறிவு எனப்படும். அறிதல் மனத்தின் தொழில். மனம் சிந்தனையின் மூலம் அறிதல் என்ற தொழிலில் ஈடுபட்டு உலகை அறிகின்றது. அப்படிப் பெறுகின்ற அறிவு தெளிவற்றது. மனத்தின் தெளிவை உணர்வும் உடலும் கரைப்படுத்துகின்றன. மஞ்சள் காமாலை கண்ணுக்குப் பார்ப்பனவெல்லாம் மஞ்சளாக இருக்கும். மனம் உயர்ந்த கருவியானாலும், உடலுக்கு மஞ்சள் காமாலை என்ற நோய் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படுகிறது. மனம் உடலால், அதனுடைய பசி, தாகம், தூக்கம், நோய், வலி இவற்றால் பாதிக்கப்படாத திறனுடையதன்று. மேலும் கேட்கும் செவி, பார்க்கும் கண், நுகரும் நாசி, ருசிக்கும் நாக்கு, தொடும் உடல் ஆகியவற்றாலும் பாதிக்கப்படும். பாதிக்கப்படாத சுதந்திரம் மனத்திற்கில்லை. அவை போக விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளாலும் மனத்தின் அறிவும், தெளிவும் பாதிக்கப்படும்.

உடலாலும், உணர்வாலும் பாதிக்கப்படாத மனம் காய்தல், உவத்தலில்லாத மனம். அம்மனம் தெளிவுக்குரியது. தெளிவுக்குரிய மனம், உயர்வுக்குரியது.

தெளிந்த உயர்வே, உயர்ந்த மனம். I-139.
சுபமுகூர்த்தம், கெட்டவேளையுண்டு. சில நேரங்கள் நல்லவை. வேறு சில நேரம் கெட்டவை. நல்ல நேரம் நல்லதைச் செய்யும். கெட்ட நேரம் கெட்டதைச் செய்யும், என்பது உலகம் உணர்ந்த உண்மை. ஸ்ரீ அரவிந்தம் இக்கூற்றை ஏற்க மறுக்கிறது. ஏனெனில், இதற்கு எதிரான அனுபவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு உண்டு. எதிரானதும் ஒரு நேரம் உண்மை என்பதால், மேற்கூறியது பொய்யாகாது. மேற்கூறியது அதை நம்புபவர்கட்கு உண்மை. நாமறிந்தவற்றை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.


1. நல்லவை
2. கெட்டவை
3. நம்மைப்பொருத்து நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமைவன.

பால் அமிர்தம், எல்லோருக்கும் நல்லது. எட்டிக்காய் கசப்பு, விஷம், அனைவருக்கும் கெட்டது. கத்தியின் பலன், உபயோகத்தைப் பொருத்தது. கத்தியை உபயோகப்படுத்தத் தெரிந்தவருக்கு பலன் உபயோகத்தைப் பொருத்தது. தெரியாதவனுக்குக் கத்தி தவறாமல் கையை வெட்டும். நம் நிலையுயர்ந்தால் கருவியின் பலனை நாமே நிர்ணயிக்கலாம். நேரம் என்பது மனத்தால் ஏற்பட்ட கருவி, காலம் எனப்படும். காலமும், நேரமும் மனத்திற்குட்பட்டவை. நேரத்தின் தன்மையைவிட மனம் உயர்ந்துவிட்டால், நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் திறன் மனத்திற்கு வரும். மனம் மேலும் உயர்ந்து உயர்ந்த மனமாகிவிட்டால், அம்மனம் செயல்படும் நேரம் சுபமுகூர்த்தமாகும். நேரத்தால் மனிதன் பாதிக்கப்படுவதற்குப் பதில், மனத்தின் உயர்வால் நேரம் உயர்வாகும்.

நேரத்தை முகூர்த்தமாக்கும் மனம் I-225,

மனம் தெளிவை ஏற்படுத்தும் கருவி. அதே காரணத்தால் சிக்கலை உற்பத்தி செய்யும் திறன் அதற்குண்டு. இராணுவம் எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும், ஆனால் இராணுவம் ஓரூரில் முகாமிட்டால் கொள்ளையடிக்கும் பழக்கம் அந்த நாளில் உண்டு. எதிரியிடமிருந்து காப்பாற்றும் இராணுவம் கொள்ளையடிக்கும் திறனுடையது. இராணுவம் ஆயுதம் தாங்கியது. ஆயுதம் எதிரியை வீழ்த்தும். இராணுவம் பிரியப்பட்டால் அதே ஆயுதம் எந்த மக்களைக் காக்க வேண்டுமோ அவர்களைத் துன்புறுத்தும். மனம் தெளிவுக்குரிய கருவி. சிக்கலை அவிழ்ப்பதே அதன் திறன். சிக்கலை உண்டு பண்ண மனம் முடிவு செய்தால் சிக்கல் தவறாது ஏற்படும்.

மனம் உள்ளவரை சிக்கலுண்டு. I-263
மனம் திறந்து பேசுவது மனம் மகிழ்ந்து இணைவதாகும். I-329
நியாயம் என்ற சொல்லை வழக்கில் சில சமயங்களில் சௌகரியம் என்ற கருத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். திருடியவன் தன்னைத் தண்டிக்காதது நியாயம் என்று கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுண்டு. திருடியவனைத் தண்டிக்காமல் அனுப்பியபொழுது அவன் அவ்விடம் விட்டுப் போகாமல் நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். ஏன் நிற்கின்றான் என விசாரித்ததில் தான் திருடிய பொருளைக் கொடுக்கும்படிக் கேட்டான். இன்று முழுவதும் நான் இதைத் திருடுவதில் செலவு செய்துவிட்டேன், இனி எங்குப் போய் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்க முடியும், என நியாயம் பேசினான். திருடனுக்குத் தான் திருடிய பொருளின் மீது உரிமையுண்டு என அவன் நினைக்கிறான்!

"அடிபட்டவனுக்கு அழ உரிமையில்லையா?"

"பெற்றவளுக்குப் பிள்ளையை அடிக்க உரிமையில்லையா? என்பதுபோல் எனக்கு என் மருமகளைக் கொடுமைப்படுத்தும் உரிமையில்லையா?" எனக் கேட்கும் மாமியாரும், அதே மனமுடைய முதலாளி, மருமகள், சிப்பந்திகள் உண்டு.

கொடுமை செய்யும் உரிமையை மனம் நியாயம் என்று கூறும். I-335.

இது நம்பமுடியாததாக இருக்கலாம். இது இன்று மட்டும் உண்மையில்லை. பைபிள் காலத்திலும் உண்மை. பாரத காலத்திலும் உண்மை. இதை ஒருவரால் நம்பமுடியவில்லை என்றால், கொடுமைக்காரர் ஒருவர் பதவியிலுள்ள ஸ்தாபனத்தில் நடந்தவற்றை அவர் அறிய முற்பட்டால், உடனே புரியும். அதைவிடத் தெளிவாகப் புரியக்கூடிய இடம் ஒன்றுண்டு. அது பொறாமைக்குரிய இடம். பொறாமை பொங்கி எழுந்தால், மனம் கொடுமைச் செய்யத் துடிக்கும். முடியும் என்றால் க்ஷணம் பொறுக்காமல் அக்கொடுமையை செய்வார்கள். செய்தபின் அது தங்கள் உரிமை என்று பேசுவார்கள். சொந்தப் பிள்ளைக்கும், பெற்று வளர்த்தவர்க்கும் இதுபோல் கொடுமை செய்வதுண்டு. அங்கு அது நியாயம் எனப் பேசுவதுண்டு.

தியானத்தில் மனம் அமைதியாகும். அமைதியான மனத்தில் பல உருவங்கள் தோன்றும். அது என்ன என்று மனம் நினைத்தால் உருவம் மறையும். அவ்வுருவங்கள், காட்சிகள் மனம் அமைதியாக இருக்கும்வரை இருக்கும்.

மனம் மறைந்தால் திருஷ்டி கிட்டும். I-347
நாம் நல்லெண்ணம், கெட்ட எண்ணம் எனப் பிரிக்கிறோம். அன்னை எண்ணமே கெட்டது என்கிறார். மனத்தில் எண்ணம் நடமாடினால் மாசு படியும்.

மனம் கடந்த மாசற்ற நிலை. I-490
எண்ணத்தைக் கடப்பதுபோல், மனத்தையே கடந்தால் மாசற்ற நிலை நிலையாகும்.


காலம் என்பது சித் என்பதிலிருந்து வருவது. நம்மைப் பொருத்தவரை சித் என்பது ஜீவியம் (consciousness) - சித் என்பது சித்தம், மனம். சித் காலத்தை உற்பத்தி செய்தது என்பது தத்துவம். மனம் காலத்தை உற்பத்தி செய்கிறது என்ற கருத்து நமக்குப் பொருந்தும். புலன்களை மனம் கருவிகளாக ஏற்படுத்தியது. மனம் காலத்தையும், புலன்களையும் உற்பத்தி செய்தது எனில், புலன்களையும், மனத்தையும் கடந்தவன் காலத்தைக் கடந்தவனாவான்.

புலனையும் மனத்தையும் கடந்தவன் காலத்தையும், இடத்தையும் கடந்தவனாவான். I-514
உடல் அஸ்திவாரம். உணர்வு மேலெழுந்தது. மனம் அதற்கும் மேலுள்ளது. செயலில் பலன் அடிப்படைத் தோற்றம் மேலெழுந்தவாரியானது. மேலெழுந்தவாரியான மனம் மேலெழுந்தவாரியான தோற்றத்தை நாடுகிறது. உரியதை நாடுபவனும், உயர்ந்ததை நாடுபவனும் நிதானமாக இருப்பார்கள். சிறியதை நாடுபவனும், உரிமையற்றதை நாடுபவனும் அவசரப்படுவார்கள், துடிப்பார்கள், பதைப்பார்கள்.

பலனை விட மனம் தோற்றத்திற்காகத் துடிக்கும். I-532

மனத்தில் எண்ணம் ஓடியபடியிருக்கும். அதுவே மனத்தின் தன்மை. வானில் மேகக் கூட்டங்கள் இருந்தபடியிருக்கும். அதே போல் மனத்தில் எண்ணமிருக்கும். இருவர் இதற்கு விலக்கு. மௌனம் பெற்ற யோகிக்கும், மனம் வளராத மடையனுக்கும் மனத்தில் எண்ணம் ஓடாது. ஓடும் எண்ணம் நாடும் விருப்பத்தைக் குறிக்கும். எண்ணம் வேகமானால் உடல் பதைபதைக்கும். கடமைகளைப் பற்றிய எண்ணங்கள் கனத்தவை. அவை மனித மனத்தைப் பிடித்து உலுக்காது. ஆசை, பயம், அவா, கற்பனைக் கோட்டை ஆகியவை எண்ணங்களை உற்பத்தி செய்யும். ஒவ்வொரு வகையான எண்ணத்திற்கும் உரிய போக்குண்டு. விவரத்தைத் தேடும் மனம் ஆராயும். முடிவை நாடும் மனம் சிந்திக்கும். அர்த்தமற்ற எண்ணங்கள் அதிவேகமாக எழும். அசை போடும் மனம் அர்த்தமற்றவற்றைக் கருதும். அவை மனத்தை உலுக்கும். கனத்த எண்ணத்திற்கு மௌனமில்லாவிட்டாலும், நிதானமிருக்கும்.

அசை போடும் மனம் பேயாய் உலுக்கும் . I-608
மேல்மனம், அடிமனம், உள்மனம், ஆழ்மனம் என்பவை பல நிலைகள். நாமறிந்த வாழ்வு முழுவதும் மேல் மனத்திற்குரியது. உள்மனம் என்பது பரந்தது. ஒருவருடைய உள்மனம் அவரறிவதானால், அவருக்கு விலங்கு, செடி கொடிகள் பாக்ஷை புரியும். அடிமனம் தெரியுமானால் அவருக்கு வீட்டினுள்ளிருக்கும்பொழுதே தெருவில் வருவது யார் எனத் தெரியும். நாம் இன்று வாழும் வாழ்வு முழுவதும் மேல் மனத்தைச் சேர்ந்ததேயாகும்.

முழு வாழ்வும் மேல் மனத்திற்குரியது. I-626
தூய மனம் தூய ஆன்மாவை அடைவது மோட்சம். I-634
மனம் உடலின் அதிபதி. I-735
செப்புப் பாத்திரத்தை மாற்றி வேறொரு பாத்திரமாக்க அதை அனலிலிட்டு உருக்க வேண்டும். பழைய வீட்டை வாங்கி புது பேஷனில் கட்ட வேண்டுமானால், பல இடங்களை இடிக்க வேண்டும். தோண்ட வேண்டும், கூரையை இறக்க வேண்டும். ரிப்பேர் முடிந்தபின் வீடு அழகாக, அலங்காரமாக இருக்கும். இடைநிலை கோரமாக இருக்கும். மனம் இன்றைய நிலையை விட அதிகத் தெளிவு பெற உள்ளதைக் கலைத்து புதியதை நிறுவுமுன் இடைநிலை பயங்கரமாக இருக்கும். மனத்திற்கு அது பைத்தியம்போல் தோன்றும்.


தெளிவுக்கு முந்தைய பைத்தியம். I-777
மனம் மாறினால் ஜடம் திருவுருமாறும். I-880
திருட்டு ஆசையை நாடும் மனம் பிரம்மத்தைத் திருட்டில் வெளிப்படுத்துகிறது. I-901
Stolen pleasure is sweet, திருட்டு ஆசைக்கு ருசி அதிகம் என்பது பழமொழி. மறைவாகச் செய்வதால் திறமை அதிகமாகத் தேவை என்பதால் ருசி அதிகமாக இருக்கும். மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என மாறும்பொழுது சரி என்பது எல்லாக் கட்டங்களிலும் தப்பாகத் தெரியும். மனம் மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளாது. பாரத யுத்தமும், கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும் இதற்கு உதாரணம். திருவுருமாற்றத்தை நாடினால், நாம் கிருஷ்ணபரமாத்மா செய்தவற்றைச் செய்ய வேண்டியிருக்கும். கிருஷ்ணன் தெய்வம். தெய்வம் எதையும் செய்யலாம். நாம் தெய்வமாக நடக்க முடியாது என்பதால் கிருஷ்ணன் சொன்னதைச் செய், செய்ததைச் செய்யாதே என்றார் பெரியோர். ஸ்ரீ அரவிந்தத்தை ஏற்க வேண்டுமானால் கிருஷ்ணன் செய்தவற்றைச் செய்ய வேண்டும். எப்படிப் போவது? கிருஷ்ணன் எதிரிகளுக்குச் செய்த துரோகம், தவறான யுக்திகளை கிருஷ்ணன் என்ன மனநிலையில் செய்தானோ அம்மனநிலையில் செய்ய வேண்டும் என்பது பொருத்தமான பதில்.

செய்யும் மனப்பான்மை சரியானால், எந்த முறையும் தவறாகாது.
திருட்டு ஆசை தவறு. அதனால் அது கூடாது. திருடினாலும் பிரம்மம் உண்டு. பிரம்மத்தைத் திருட்டில் காண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் பிரம்மத்திற்காகத் திருட்டையும் ஏற்க வேண்டும். ஏற்கும் மனப்பான்மை, பிரம்மத்திற்குரியதாக இருக்க வேண்டும், திருட்டுக்குரிய மனப்பான்மையாக இருக்கக்கூடாது. பிரம்மத்திற்குரிய மனப்பான்மையுடன் திருட்டை ஏற்றால் அது திருடாக இருக்காது, திருவுள்ளமாக இருக்கும்.


தரித்திரம் போனாலும் மனம் தத்தளிக்கும். I-923
இம்மனநிலையை முன்னோர் அறிந்ததால் விருதுபட்டிக்குப் போன சனியனை வீடுவரை வந்துவிட்டுப் போ என்ற பழமொழியைச் சொன்னார்கள்.

உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும். II-26
ஓர் எண்ணம் சரியில்லை என்றால், நம்மால் அதை ஒதுக்க முடிவதில்லை. நம்மை மீறி மனம் ஏதாவது நடக்காதா என எதிர்பார்க்கும். மறுக்கும் எண்ணம் உணர்வு பெறுவது எதிர்பார்ப்பதாகும். மனம் எப்படி எதிர்பார்க்கும்? எந்தச் சட்டப்படி, எந்த நியாயப்படி எதிர்பார்க்கும் என்று நம்மால் நிர்ணயிக்க முடியாது. நம் அறிவைக் கடந்த நிலையில், நம் கற்பனை இதுவரை கருதாதவற்றையும் எதிர்பார்க்கும் திறனுடையது மனம்.

மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும். II-29
நம் மனத்தை நாம் அறிவோம் என நினைப்பது தவறு. நாம் அறியாத எண்ணங்கள், நாம் அறிய முடியாத எண்ணங்கள் நம் மனத்துள்ளிருக்கும். ஆசைக்கு சந்தர்ப்பம் வந்தபொழுது, அதை மறுக்கும் நிலை ஏற்பட்டபொழுது மனம் பாடுபடுவதை அறிந்தவருக்கு அது புரியும். புத்தி தெளிவாக இருந்தாலும், உணர்வு மாறுபட்டிருக்கும்.

பிறரைத் தீண்டும் மனம் உறவை விஷமாக்கும். II-68

உறவு என நாம் கூறுவது இரத்தபாசம். Human relationship என்பதை நாம் உறவு என்ற சொல்லால் குறிப்பிட்டால் சொந்தம் எழுந்து தெளிவு மறையும். உடன் பிறந்தவர், தம்பதிகள், வியாபாரக் கூட்டு, நட்பு இவற்றுள் உள்ள மனித உறவை நான் உறவு எனக் குறிப்பிடுகிறேன். அண்ணனுக்கு 9 பிள்ளைகள் தம்பிக்கு 1 பிள்ளை. சட்டப்படி சமமானாலும் தம்பி அண்ணனுக்குப் பெரிய பாகம் கொடுப்பது, கணவன் கடனுக்குத் தன் நகைகள் அனைத்தையும் கொடுத்த மனைவி, கூட்டில் கூட்டாளி தன் கடனைக் கொடுக்க சம்மதப்பட்ட கூட்டாளி தன் பங்கை விட்டுக் கொடுப்பது, நண்பனுக்கு உபரி இலாபம் வர பிரதிபலனின்றி உழைத்த நண்பன் ஆகியோர் இரத்தபாசத்தையும், திருமணக்கடமையையும், வியாபார நிர்ப்பந்தங்களையும், நட்பின் உரிமையையும் விட்டுக் கொடுத்த மனித உள்ளம் உள்ளவர்கள். மனித நேயத்தைக் கடந்த தெய்வச் சாயல் உள்ள உறவுகள் இவை. இவ்வுறவில் ஆதாயமாகவோ, ஆபாசமாகவோ, கணக்குப்படியோ பேசுவது தவறு. பேசினால் உறவு தன் உயர்ந்த நிலையை இழக்கும்.

பெரிய பாகத்தைப் பெற்ற அண்ணன், நீ விட்டுக் கொடுத்தது உண்மைதான், ஆனால் என் கஷ்டம் தீரவில்லையே என்பதுண்டு.
"உன் நகை கடனை அடைத்தது, இன்று பிழைக்க வழியில்லையே" எனக் கணவன் கூறுவான்.
"உன் பங்கு இலாபம் என் கடனை அடைத்தது உண்மைதான். இன்று முதல் போதவில்லையே".
"இலாபம் வந்தது உண்மைதான். ஆனால் மரியாதை வரவில்லையே" எனக் கூட்டாளியும், நண்பனும் பேசினால் மனம் உடைந்துவிடும். இவற்றை மனிதனால் பொறுக்க முடியாது. ஆனால் இதைக் கடந்த நிலையுண்டு. கணவன் மனைவியிடம் நான் விரும்பிய பெண் வேறு என்று கூறினால், அடுத்தவளை கணவன் மனம் தீண்டினால், அதன் பிறகு அங்கிருப்பது திருமணமில்லை. வெறும் உறவுதான்.
நேரடியாக மனம் சத்திய ஜீவியத்தை அடைய முடியுமென்றாலும் அது அரிது II-74

நாட்டில் தலைமைப் பதவியை நாடுபவர் படிப்படியாக உயருவதே இயல்பு. அதுவே கஷ்டம். நேரடியாக நாட்டின் தலைமைப் பதவிக்கு இந்திராவும், ராஜீவும் வந்தது அரிது. ஆன்மீகச் சட்டம் மனம் சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைய அனுமதிக்கும். ஆனால் நடைமுறையில் அது அரிது. படிப்படியாக உயருவதே முடியக்கூடியது. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் அப்படி உயர்ந்தவர்களே. அன்னை சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைந்தவர்கள். நான் கொல்லைப் புறமாக வந்தேன் என்றார். பகவான் அவதாரப் புருஷர். 6 வருஷ காலத்தில் அத்தனை யோக சித்திகளும் அவரைத் தேடி வந்தன. அவர் இதைக் கூறினால் நாம் எங்கே?

மனம் உணரும் ஆனந்தம் அழகு. II-176
சச்சிதானந்தத்தில் உள்ள ஆனந்தத்தை மனமும், உணர்வும், ஆன்மாவும் காண முடியும். ஆன்மாவின் பார்வைக்கு ஆனந்தம் அன்பாகத் தெரியும். உணர்வில் ஆனந்தம் சந்தோஷமாகத் தெரியும். மனத்தின் கண்ணில் ஆனந்தம் அழகாகத் தெரியும்.

மனம் ஏற்காவிடில் எதிரான பலனிருக்கும். II-337
இது முக்கியமான செய்தி. ஆன்மீகப் பலனைப் பெறும் தகுதியைக் குறிக்கிறது. பெறுபவர் எக்காரணத்தாலோ தன்னை உயர்வாகக் கருதினால், தாழ்ந்தவரிடமிருந்து ஆன்மீகப் பலன் பெற முடிவு செய்தால், அதை அவர் மனம் ஏற்காவிட்டால், பலன் எதிராக இருக்கும். வயதாலோ, படிப்பாலோ, ஜாதியாலோ, பெண் என்பதனாலோ, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமிருந்து தீட்சை பெற முடிவு செய்தவர் பெறும் பலன் தீட்சையாக இருக்காது. தீட்சை பெற்றவுடன் அவருக்கு நோய் அல்லது விபத்து வரும். தீட்சை, ஆசி, அனுக்கிரஹம், கருணை ஆகியவை உயர்ந்தவை. தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் அதைப் பெற முடியாது. பெற முன் வந்தால் வீட்டில் தவறு நடக்கும். அது விலக்கப்பட வேண்டியது. குரு ஸ்தானத்தில் உள்ளவர் இதற்குச் சம்மதிக்கமாட்டார்.

அடங்கிய மனதை சுயநலம் மறக்கும். II-584

உடலும், உணர்வும் தேவை எழும் நேரம் அடக்க முடியாத வேகமுள்ளவை. மனத்திற்கும் அது உண்டு என்றாலும், பொதுவாக நாம் அதைக் காண்பதில்லை. மனிதன் விரும்பித் தவறு செய்வதுண்டு. தவறே மனதில் எழாத நேரம் பிறர் மூலம் ஆசையைச் சந்தர்ப்பம் கிளப்புவதுண்டு. முதல் நிலையிலுள்ளவனுக்கு நாம் சொல்லக் கூடியதில்லை. அவனுக்கே அவன் செய்வது தவறு என்று புரிய வேண்டும். தானே தவற்றை நாடி நான் போகவில்லை. பிறரால் நான் கெட்டுப் போனேன் என்பவன் செயலைப் பொருத்தவரை முந்தைய நிலையிலுள்ளவனிலிருந்து வேறுபட்டவனில்லை. எந்த அளவுக்கு மாறுபட்டவன்? ஏன் அந்த நிலை?

பிறர் தூண்டுதலையும் புறக்கணித்து முறையாக நடப்பவன் மனிதன். பிறர் தூண்டுதலுக்கு இரையானதற்குக் காரணம் மன உறுதியில்லை எனலாம். மன உறுதியுடன் எல்லா இடங்களிலும் நடந்தவருக்கும், பிறர் தூண்டுதல் சில சமயங்களில் காலை வாரி விடுவதுண்டு. அதற்குரிய பல காரணங்களில் ஒன்று கர்ம பலன். அதுவும் தன்னுடைய கர்மமாக இருக்கலாம். பிறர் கர்ம பலனில் தான் பங்கு கொண்டதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பலியானவன் பங்கு என்ன?

"வேகம் உள்ளத்தில் மறுக்க முடியாததாக இருப்பது ஒரு காரணம்"

மறுக்க முடியாத வேகம், அடக்க முடியாத உணர்ச்சி, பிறரைத் தூண்டச் செய்யும். நம்முள் உள்ள வேகம் அடக்க முடியாததானால், வெளியிலிருந்து சுயநலம் நம்மைத் தூண்டும். இது மனத்தின் தன்மை.

பூர்த்தியான மனத்திற்குப் புரியாதது இல்லை. II 713


எந்தக் காரியத்தை முடிப்பதும் பிரார்த்தனையால் முடியும். இது திறமையின் முதற்படி. அடுத்த கட்டத்தில் திறமை என்பது இனிமையான மனம். முதல் நிலை உடலுக்குரியது, அடுத்தது உணர்வுக்குரியது. மூன்றாம் கட்டத்தில் மனம் செயல்படுகிறது. மனம் தவறாது காரியத்தை முடிக்க, எனக்குப் புரியாதது இல்லை என்று சொல்ல வேண்டும். அம்மனம் பூர்த்தியானது.

மனத்தால் சரணாகதியை ஏற்பது மலை ஏறுவது போலாகும். II-869
சரணாகதிதத்துவத்தை கீதை மேற்கொண்டது. வைஷ்ணவர்கள் பின்பற்றுவது. நாயனார்கள் போற்றியது. மோட்சத்தை நாடி சரணாகதியை இவர்கள் மேற்கொண்டார்கள். நாம் நாடுவது மோட்சமன்று, பரிணாமம், திருவுருமாற்றம். இதற்குத் தேவையானது சரணாகதி என்றால் சொல் ஒன்றே என்றாலும், பொருள் வேறு. முதலீடு செய்து தொழில் செய்கிறோம். சிறிய தொழிலுக்கும் முதல் வேண்டும், பெரிய தொழிலுக்கும் முதல் தேவை. இரண்டுக்கும் தேவையானது முதல் என்றாலும் பெரிய தொழிலுக்குத் தேவையானது பெரிய முதல். வித்தியாசம் பெரியது.

மோட்சம் பெற ஆசையையும், அகந்தையையும் சரணம் செய்ய வேண்டும். அகந்தை என இங்கு குறிப்பிடுவது ஒரு கரணத்திற்குரிய அகந்தை.
பரிணாமம், திருவுருமாற்றம் பெற சரணாகதி தேவை என்றால் மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகிய நான்கையும் சரணம் செய்ய வேண்டும். இவற்றுள் 4 கரணங்கட்குரிய அகந்தைகள் அடங்கியுள்ளன. 4 அகந்தைகளும் சரணம் செய்யப்படவேண்டும்.
பகவான் சரணாகதி கடினம் என்கிறார்.
சரணாகதியை இதுவரை ஏற்றவர்கள் பகவானும், அன்னையும் மட்டுமே.
எல்லாக் கரணங்கட்கும் உரிய எல்லா அகந்தைகளையும் மனம் மட்டும் சரணம் செய்ய முடியாது. பூரண யோகம் ஒரு கரணத்தால் மனத்தால் செய்யப்படுவதன்று. அதனால் பூரணமான செயலை ஒரு கரணம் மனம் மேற்கொள்வது மலை ஏறுவது போலிருக்கும்.


மனத்தைக் காண முடியாது. எண்ணத்தைக் காணலாம். II-916
10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு 10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம் ஏற்பட்டு எண்ணினார்கள். 9 பேர் எனத் தெரிந்தது. ஒவ்வொருவரும் எண்ணினார்கள். முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் என அழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக எண்ணிக் காட்டியதாகக் கதை. எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம். வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.

எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும். நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது. உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம். உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது. மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.

ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு. தம் குறைகளை பிறர் அறிவதுபோல் அவர் அறிந்தால் அவருக்கு அத்தகுதியுண்டு.

மனம் மகிழுங்கள்

கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.



என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு!

"நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது.

போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை?

மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.

இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும்.

நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது!

அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது!

எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!

அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள்.

மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகவில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.

எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!

அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.

போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!

ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?

"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.

ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.

என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.

"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"

வாழ்வின் நிறமே மாறிவிடும்!

மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?

வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.

கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...